சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை.. விரைவில் அறிவிப்பு
டெல்லி: தமிழக எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், கலாநிதி வீராச்சாமி கோரிக்கையை ஏற்று சாதாரண பயணிகள் ரயிலை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து பல மாதங்கள் முடங்கியது. இதனை தொடர்ந்து சாலை போக்குவரத்து ஓரளவு சீரடைந்தது.
ஆனால் விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முழுமையாக சீரடையவில்லை. நடுத்தர மக்கள் அதிகளவு பயன்படுத்தும் ரயில் போக்குவரத்தை பொறுத்தவரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து கோரிக்கை
பல்வேறு மாநிலங்களில் பயணிகள் ரயில்கள் இன்னும் முழுமையாக இயக்கப்படவில்லை. சிறு நகரங்களுக்கு இடையே குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுவதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு ரயில் பயணிகள் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக எம்.பி.க்கள் மனு
இதற்கிடையே முன்பதிவில்லாத பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்றும் ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லாத பெட்டிகளை சேர்க்க வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ்விடம் தமிழக எம்.பி.க்கள் சு.வெங்கடேசனும், கலாநிதி வீராச்சாமியும் கடந்த வாரம் மனு அளித்தனர். வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் உதவியாக இருப்பதால் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் கூறி இருந்தனர். அத்துடன் சாதாரண மக்களுக்காக விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளை இணைத்து விடவும் வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

கடிதம் எழுதினேன்
இந்த நிலையில் தமிழக எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், கலாநிதி வீராச்சாமி கோரிக்கையை ஏற்று சாதாரண பயணிகள் ரயிலை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் கூறியதாவது:- இந்திய ரயில்வே சாதாரண பயணி வண்டிகளை இயக்காமல் இருப்பதால் இந்திய ரயில்வே முழுவதும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை சுட்டிக்காட்டி அவற்றை இயக்க ரயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன் .

நடவடிக்கை எடுத்துள்ளது
ரயில்வே அமைச்சரை நானும் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியும் நேரில் வலியுறுத்தினோம். இப்போது ரயில்வே வாரியம் இந்திய ரயில்வே முழுவதும் உள்ள ரயில்வே பயணி போக்குவரத்து அதிகாரிகளை பயணி வண்டிகளை மெமு , டெமு பாரம்பரிய பழைய வண்டிகள் இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வசதியாக ஏற்பாடுகளை செய்திடவும், அவற்றுக்கான கால அட்டவணைகளை 16ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும், ரயில்வே வாரியம் அனைத்து ரயில்களையும் கோரியுள்ளது.

ரயில்வே அமைச்சருக்கு நன்றி
இதற்கு ரயில்வேயில் பயணி போக்குவரத்து அதிகாரி தெற்கு ரயில்வே முழுவதும் அனைத்து கோட்டங்களிலும் இதற்கான கால அட்டவணையை தயாரித்து அனுப்புமாறு கேட்டுள்ளார். அனைத்து கோட்டங்களும் அதற்கான அட்டவணைகளை அனுப்பி வைத்துள்ளனர். இந்தியா முழுவதும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். ரயில்வே அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications