'சீனா திருந்தவில்லை'.. 'இந்தியா மிக வலுவான பதிலடி'.. ராணுவ தளபதி எம்.எம்.நரவனே பரபர பேட்டி!
டெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தினர் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர் 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் மூண்டது.
இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர்.

பலகட்ட பேச்சுவார்த்தை
இதனை தொடர்ந்து லடாக் எல்லையில் பெரும் பதற்றம் உண்டானது. இதன் பின்பு லடாக் எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதனால் ஓரளவு நல்ல பயன் கிடைத்தது. பதற்றமான பகுதிகளில் கூடுதலாக குவிக்கப்பட்டு இருந்த இரு நாடு படை வீரர்களும், அவர்களின் ராணுவ டாங்கிகளும் விலக்கிக் கொண்டன. முதலில் 12 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.

முரண்டு பிடிக்கும் சீனா
இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே கடைசியாக 13-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது லடாக் எல்லையில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து தங்களது படைகளை விலக்கி கொள்ள முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு மிக நல்ல முன்னேற்றம் கிடைத்தது. கடைசியாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 13-வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இரு தரப்பின் நிலையை மாற்றுவதற்கான சீனாவின் ஒருதலைப்பட்ச முயற்சிகளை இந்தியா சுட்டிக்காட்டியது. ஆனால் இந்திய தரப்பின் கோரிக்கையை சீனத் தரப்பு ஏற்கவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அச்சுறுத்தல் குறையவில்லை
இந்த நிலையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான 14-வது கட்ட சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே '' சீன எல்லையில் அச்சுறுத்தல் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை'' என்று கூறினார். ''கமாண்டர் நிலை பேச்சுவார்த்தையின் 14 வது சுற்று நடந்து கொண்டிருக்கிறது, வரும் நாட்களில் நீங்கள் மேலும் முன்னேற்றங்களைக் காண்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் ஓரளவு விலகல் இருந்தபோதிலும், அச்சுறுத்தல் எந்த வகையிலும் குறையவில்லை'' என்று அவர் கூறினார்.
Recommended Video

சீனா கட்டிய கிராமம்
உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றுவதற்காக சீனா மேற்கொள்ளும் முயற்சிக்கு இந்தியாவின் மிகவும் வலுவான பதிலடியை கொடுத்து வருகிறது என்றும் எம்.எம்.நரவனே தெரிவித்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் சீனா ஒரு கிராமத்தை கட்டுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், '' இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டது. நாங்கள் எங்கள் எல்லைகள் முழுவதிலும் நன்றாகத் தயாராக கண்காணிப்பில் இருக்கிறோம். எல்லை பகுதிகளில் படைகளை சீரமைத்தல், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்கிறோம்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications