கோபப்பட்ட காங்கிரஸ் தலைவர்.. “நம்பர் 2” சோனியாவின் சமாதான முயற்சி தோல்வி.. அடுத்த விக்கெட் இவர்தானா?
டெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தனக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படாததால் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத்துக்கு கட்சித் தலைவருக்கு அடுத்த நிலை பொறுப்பை அளிப்பதாக கூறியும் அவர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி தலைவர்கள் பலர் வெளியேறி வரும் நிலையில், குலாம் நபி ஆசாத்தும் அதிரடி முடிவு எடுப்பார் என அக்கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபட்டு வருகிறது.

காங்கிரஸில் குழப்பம்
2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி காங்கிரஸ் கட்சி கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலிலும் தோல்வியடைந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலிலும் நான்கில் தோல்வியைச் சந்தித்தது. ஆட்சிப் பொறுப்பில் இருந்த பஞ்சாப்பையும் ஆம் ஆத்மியிடம் இழந்தது. தற்போது 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது. இதனால், கட்சிக்குள்ளேயே அதிருப்தி குரல்கள் கடுமையாக ஒலிக்கத் தொடங்கின. பா.ஜ.கவை எதிர்க்க வலிமையான தலைமை வேண்டும் என அக்கட்சியின் அதிருப்தி குழுவான ஜி 23 தலைவர்கள் கூறி வந்தனர்.

சிந்தனை அமர்வு மாநாடு
பரபரப்பான சூழலில் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாடு காங்கிரஸில் முக்கிய மாற்றங்களைச் செய்வதற்காக கூடியது. வரவிருக்கும் சட்டசபை தேர்தல்கள், 2024ல் நடைபெறும் மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மூன்று குழுக்களையும் அமைத்து சோனியா காந்தி அண்மையில் உத்தரவிட்டார். அதில், அரசியல் விவகாரக் குழுவில் குலாம் நபி ஆசாத் இடம்பெற்றார்.

ராஜ்ய சபா சீட் இல்லை
இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களது பெயர்கள் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் அவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜி 23 தலைவர்கள் புறக்கணிப்பு
குலாம் நபி ஆசாத் தலைமையில்தான் ஜி 23 தலைவர்கள், காங்கிரஸ் கட்சி தலைமையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி, சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஜி 23 தலைவர்களில் ஒரு சிலரைத் தவிர்த்து, பெரும்பாலானோரை கட்சித் தலைமை புறக்கணித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சிந்தனை அமர்வு மாநாட்டில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜி 23 தலைவர்களுக்கு அழைப்பே அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத் தனக்கு ராஜ்ய சபா சீட் வழங்காததால் காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகவும், பல முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ள தன்னை தொடர்ந்து காங்கிரஸ் தலைமை புறக்கணித்து வருவது குறித்து அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டது.

சமாதான பேச்சு
இதை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குலாம் நபி ஆசாத்தை டெல்லிக்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காங்கிரஸில் தலைவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவரிடம் சோனியா கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதற்கு ஆசாத், அதையும் இளம் தலைமுறையினரிடமே கொடுத்து விடுங்கள் எனக் கோபமாக கூறிவிட்டாராம்.

வெளியேறுவாரா?
தனக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்காது என்றே காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகினார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களான கபில் சிபல், சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகியுள்ளது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், குலாம் நபி ஆசாத்தும் அத்தகைய முடிவையே எடுக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications