இன்று முதல் தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ்! யார் போட்டுக் கொள்ளலாம்? கட்டணம் எவ்வளவு? முழு தகவல்
டெல்லி: நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் வேக்சின் போடும் பணிகள் தொடங்குகிறது.
இந்தியாவில் கடந்த 2020 தொடக்கத்தில் பரவ தொடங்கிய கொரோனா நாடு முழுவதும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக டெல்டா கொரோனாவால் ஏற்பட்ட இரண்டாம் அலையில் இந்தியாவில் உயிரிழப்புகள் உச்சம் தொட்டது.
இப்போது தான் நாட்டில் வைரஸ் பாதிப்பு குறைந்து வெகுவாக கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு நாட்டில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட கொரோனா வேக்சின் பணிகள் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

3ஆவது டோஸ்
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிய வரும் நிலையில், உலகெங்கும் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை சுகாதார பணியாளர்கள், முன்கள ஊழியர்கள், 60 வயதைக் கடந்தவர்கள் ஆகியோருக்கு 3ஆவது டோஸ் வேக்சின் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 10) முதல் நாட்டில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3ஆவது டோஸ் வேக்சின் போட மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி இன்று முதல் 18 வயதைத் தாண்டியவர்கள் 3ஆவது டோஸ் வேக்சின் போட்டுக் கொள்ளலாம்.

இந்தியா
அதன்படி 18 வயதை கடந்தவர்கள் இன்று முதல் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் வேக்சின் போட்டுக் கொள்ளலாம். அதேநேரம் பொதுமக்களுக்கு முதல் 2 டோஸ் வேக்சின் தொடர்ந்து இலவசமாக அளிக்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முதலில் பூஸ்டர் டோஸ் தேவையில்லை என்று கூறிய உலக சுகாதார அமைப்பு, பின்னர் வேக்சின் போட்டவர்களின் உடலில் ஆன்டிபாடிகள் குறையும் போது செலுத்தலாம் என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

யார் போட்டுக் கொள்ளலாம்
இந்தியாவைப் பொருத்தவரை பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள இரண்டே தகுதிகள் தான். அவர் 18 வயதைக் கடந்தவராக இருக்க வேண்டும். அடுத்து 2ஆம் டோஸ் வேக்சின் எடுத்து 9 மாதங்கள் கடந்து இருக்க வேண்டும். இந்த இரண்டையும் பூர்த்தி செய்திருந்தால் ஒருவர் 3ஆவது டோஸ் போட்டுக் கொள்ளலாம். முதல் இரண்டு டோஸ்களில் எந்த வேக்சின் அளிக்கப்பட்டதோ, அதே வேக்சின் தான் 3ஆவது டோஸாக அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம்
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோர்களைத் தவிர, மற்ற அனைவரும் தனியார் மையங்களில் 3ஆவது டோஸுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கிடையே ரூ.600 மற்றும் ரூ.1,200க்கு விற்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ரூ.225ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி தனியார் வேக்சின் மையங்கள் அதிகபட்சமாக 150 ரூபாய் சேவைக் கட்டணமாக வசூலிக்கலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

புக் செய்வது எப்படி
3ஆவது டோஸ் வேக்சினுக்கு தனியாகப் பதிவு செய்யத் தேவையில்லை. கோவின் தளத்தில் லாக் இன் செய்து, 3ஆவது டோஸ் தடுப்பூசிக்கு புக் செய்து கொண்டால் போதும். பின்னர் வேக்சின் போட்டுக் கொள்ளலாம். அல்லது நேரடியாக வேக்சின் மையங்களுக்குச் சென்று, அங்கேயே புக் செய்தும் வேக்சின் போட்டுக் கொள்ளலாம். இந்தியாவில் இதுவரை 2.4 கோடி சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications