இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 37,593 பேர் பாதிப்பு, 648 பேர் மரணம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.ஒரே நாளில் 648 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 37,593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 648 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் ஒரே நாளில் 37,593 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது. கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 25 ஆயிரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே அடியாக உயர்ந்து 37ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,25,12,366 பேராக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 34,169 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,17,54,281 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,22,327 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24மணிநேரத்தில் 648 பேர் கொரோனாவால் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,35,758 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 61,90,930 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை 59,55,04,593 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 58,07,64,210 தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 3,62,24,601 தடுப்பூசிகள் இருப்பு மற்றும் பயன்படுத்தப்படாத தடுப்பூசி அளவுகள் இன்னும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகைகளில் கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது. இதில் டெல்டா வகை கொரோனா மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரசாக உள்ளது. இந்த வைரஸ் கொரோனாவின் 3வது அலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பல மாநிலங்களில் டெல்டா வைரஸ் பரவி உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் டெல்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27 பேருக்கு புதிதாக டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் டெல்டா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றும் இங்கு 24, 296 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா பாதித்த 173 பேர் மரணம் அடைந்தனர். மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவோர் சதவிகிதம் 18.04 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. மொகரம் மற்றும் ஓணப்பண்டிகையையொட்டி இந்த ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுகிழமை ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி வருகிற ஞாயிற்றுகிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்து உள்ளது. கொரோனா 3வது அலை பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இதனை எதிர்கொள்ள அரசு தயாராகி வருவதாக பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
பொதுமக்களையும், அவர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே ஞாயிற்றுகிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications