'2022க்குள் அனைவருக்கும் வீடு' 'விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு' டிரெண்டாகும் மோடியின் வாக்குறுதிகள்
டெல்லி: நாட்டின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் அதேவேளையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி அளித்த, ''2022 க்குள் அனைவருக்கும் வீடு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு" போன்ற வாக்குறுதிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
Recommended Video
இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.
பிரதமர் மோடி தலைப்பாகையை கவனித்தீர்களா..! செங்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலம்

அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானது
தனது சுதந்திர தின உரையில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் அதாவது இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான தனது தொலைநோக்கு திட்டம் குறித்தும் பேசினார். பிரதமர் மோடி பேசுகையில், "அடுத்த 25 ஆண்டுகள் தேச வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது. நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களின் கண்ட கனவை நனவாக்கும் வகையில் செயல்பட வேண்டும்" என்று பேசினார்.

முந்தைய வாக்குறுதிகள்
பிரதமர் மோடி 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற விஷன் குறித்து பிரதமர் மோடி பேசிய நிலையில், 2022 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு என்ற பிரதமர் மோடியின் முந்தைய வாக்குறுதிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டுக்குள் பிரதமர் மோடி நிர்ணயித்த வாக்குறுதிகளை கணக்கில் கொள்ளாமல் 2047- க்கு இலக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிலர் விமர்சித்துள்ளனர்.

அனைவருக்கும் வீடு
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் திட்ட பயனாளிகள் மத்தியில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ''2022க்குள் அனைத்து இந்தியருக்கும் வீடு என்பதை நோக்கி அரசு பணியாற்றி வருகிறது. அவாஸ் யோஜனா என்பது வெறும் செங்கல் மற்றும் சுண்ணாம்புக்கலவை என்பது மட்டும் அல்ல. இந்தத் திட்டம் என்பது சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் கனவுகளை நனவாக்குவதாகும். இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருவாயில் அனைத்து இந்தியர்களுக்கும் வீடு என்பதை உறுதி செய்வதை நோக்கி பணியாற்றி கொண்டிருக்கிறோம்" என்றார்.

விவசாயிகள் வருமான இரட்டிப்பு
பின்னர் அதே ஆண்டு விவசாயிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு ஆக்கப்படும் என்றும் விவசாயத்துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி பேசினார். ஆனால் பிரதமர் மோடி தனது வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றுவதில்லை என்று எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லாப் அண்மையில் பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டுக்கு நிர்ணயித்த இலக்குகளை நினைவுகூர்ந்து கடுமையாக விமர்சித்து இருந்தார்.

போலி வாக்குறுதிகள் அளிக்கும் கலாசாரம்
இதில், ''விவசாயிகளின் வருமானம் இருமடங்கு, 2022 ஆம் ஆண்டுக்குள் புல்லெட் ரெயில்கள் இயக்கப்படும், இந்தியர்கள் அனைவருக்கும் வீடு, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்" ஆகிய வாக்குறுதிகளை பிரதமர் மோடி அளித்து இருந்ததாக கூறி விமர்சித்து இருந்தார். மேலும், போலி வாக்குறுதிகள் அளிக்கும் இந்த கலாசாரம் எப்போது முடிவுக்கு வரும்? 2022 ஆம் ஆண்டுக்கு நிர்ணயித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய காலக்கெடுவை பிரதமர் நிர்ணயிக்கப்போகிறாரா?" என்றும் கவுரவ் வல்லாப் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புல்லட் ரயில் திட்டம் என்னானது?
எனினும் கடந்த ஜுன் மாதம் பேசிய ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்னவ் இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் என்ற இலக்கை சூரத் மற்றும் பில்மோரா இடையில் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் எட்ட முடியும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறியிருந்தார். புல்லெட் ரயில் திட்டம் தாமதத்திற்கு நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தாமதம் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவையே காரணம் என்று அரசு கூறிவருகிறது. நாட்டின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் அதேவேளையில், பிரதமர் மோடியின் பழைய வாக்குறுதிகளும் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.