பாஜக பக்கா பிளான்.. மத்திய அமைச்சராக எல்.முருகன் தேர்வு.. பின்னணி காரணம் என்ன?
டெல்லி: தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகன் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
Recommended Video
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. 12 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 43 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் 7 பேர் அமைச்சரவையில் இடம் பெறுகிறார்கள். குஜராத்தை சேர்ந்த 5 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுகிறார்கள். இந்த மாநிலங்களுக்கு அடுத்தடுத்து தேர்தல்கள் நடைபெற இருப்பதும் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.

வேகமான வளர்ச்சி
தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து கேபினெட் இடம் கிடைத்துள்ளது. முருகன் தற்போது தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார். எல்.முருகன் வளர்ச்சி என்பது தமிழ்நாடு பாஜகவில் வேறு யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாத அளவுக்கான வேகத்தில் இருக்கிறது. தமிழிசை சௌந்தராஜன் மட்டும் இதில் விதிவிலக்கு. அவரும் வேகமாக வளர்ந்து பாஜக தலைவர் ஆகி தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு பதவியும் வகித்து வருகிறார்.

தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர்
ஆனால் பாஜக தலைவராக தமிழிசை வரும் முன்பாக அவர் மக்களால் நன்கு அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருந்தார். முருகன் அப்படி கிடையாது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞரான டாக்டர் முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். திடீரென கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு அவரது பின்னணி பற்றி தெரியாது.

திடீர் வளர்ச்சி
எத்தனையோ மூத்த தலைவர்கள் இருக்கும்போது முருகன் எப்படி இந்த பதவிக்கு வந்தார் என்று அப்போது ஆச்சரியம் நிலவியது. முருகன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜகவை உயர் ஜாதியினர் கட்சி எந்த பிம்பத்திலிருந்து உடைப்பதற்காக இந்த மாதிரி ஒரு நடவடிக்கையை பாஜக தலைமை எடுத்ததாக அப்போது கூறப்பட்டது.

வேல் யாத்திரை நடத்திய முருகன்
முருகன் தலைவராக பதவியேற்ற பிறகு தமிழிசை சௌந்தர்ராஜன் போலவே கட்சி வளர்ச்சிப் பணிகளில் மிகவும் இறங்கி வேலை செய்தார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அவர் நடத்திய வேல் யாத்திரை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. முருகப் பெருமானின், ஆறுபடை வீடுகளுக்கும் அவர் யாத்திரை சென்று கந்த சஷ்டி கவசம் தொடர்பாக கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதற்கும், அரசியல் ஆதரவை வலுப்படுத்துவதற்கும் அந்த யாத்திரையை பயன்படுத்திக் கொண்டார் முருகன்.

4 தொகுதிகளில் வெற்றி
இந்த நிலையில்தான் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிகரமாக அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது பாஜக. நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் முருகன் போட்டியிட்டாலும் தோல்வியடைய நேரிட்டது. இருப்பினும் வெகு காலத்துக்குப் பிறகு சட்டசபைக்குள் பாஜக காலடி எடுத்து வைத்துள்ளது. அதுவும் நான்கு உறுப்பினர்களுடன் நுழைந்துள்ளது. இது பாஜக மேலிடத்தை கவர்ந்துள்ளது.

ஜாதி வாக்கு வங்கி
இந்த நிலையில்தான் முருகன் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டு உள்ளார். இதன்மூலம் அவருக்கான அங்கீகாரத்தை பாஜக வழங்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக்குவது பாஜகவின் அரசியலுக்கு உதவக்கூடும். ஏற்கனவே, தங்களுக்கு பிராமணர்கள், நாடார்கள், முத்தரையர்கள், தேவேந்திரகுல வேளாளர் ஆகிய ஜாதி ஆதரவு இருப்பதாக பாஜக நம்புகிறது. தலித்களை ஒருங்கிணைப்பதில் இப்போது பாஜக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஜாதி ரீதியாக வலுப்படுத்த பாஜக காய் நகர்த்துகிறது. மேலும் தமிழக பாஜகவை வளர்ப்பதற்காக வேல் யாத்திரை நடத்தியவர், நான்கு உறுப்பினர்கள் பாஜகவுக்கு சட்டசபையில் கிடைப்பதற்கு வழிவகை செய்தவர் என்பது போன்ற அவரது அடுத்தடுத்த செயல்பாடுகள் இந்த அளவுக்கு உச்சத்துக்கு கொண்டு போய் இருக்கிறது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications