பல அடுக்கு பாதுகாப்புடன் பள்ளிகளைப் படிப்படியாக திறக்க ஐசிஎம்ஆர் நிபுணர்கள் அறிவுறுத்தல்
டெல்லி: கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், பள்ளிகளைப் படிப்படியாக திறக்கப்பட வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறக்கப்படும்போது, ஆசிரியர்கள், ஊழியர்கள், குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும் ஊழியர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்தியிருப்பதை இறுதி செய்ய வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில், யுனெஸ்கோவின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி ஐசிஎம்ஆர் வல்லுநர்கள் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். "கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகளைத் திறத்தல்: ஒரு நிலையான குழப்பம்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அந்தக்கட்டுரையில் பள்ளிகளை திறப்பது குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். பள்ளிகளில் குழந்தைகளுக்கு உடல் வெப்பநிலை மற்றும் கொரோனா அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

32 கோடி குழந்தைகள்
யுனெஸ்கோ அறிக்கையின்படி, கடந்த 500 நாட்களுக்கும் மேலாக உலக அளவில் 32 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. சில வார்த்தைகளைக் கூட கற்கமுடியாமல் இருக்கும் விளிம்பு நிலை சமூகத்தில் இருக்கும் குழந்தைகள், ஏழ்மையில் இருக்கும் குழந்தைகள், மலைப்பகுதிகளில், தகவல் தொடர்பு இல்லாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிகள் திறக்காமை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதால், சமூகத்தின் தொடர்பை இழந்து தவிக்கிறார்கள். உடல்ரீதியான செயல்பாடுகள், நண்பர்களுக்கு இடையே பிணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கான தடுப்பூசி இந்தியாவில் இன்னும் பரிசோதனை முயற்சியில்தான் இருக்கிறது. ஆய்வுகள், ஆதாரங்கள் அடிப்படையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கொரோனாவில் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆதலால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நெறிமுறைகள்
பள்ளிகள் திறப்பு மூலம் அதிகமான பலன்களைப் பெற வேண்டுமென்றால், கற்கும் குழந்தைகளுக்கு கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க பல அடுக்குப் பாதுகாப்புச் சூழலை உருவாக்கலாம். முறையான முகக்கவசம் அணிதல், சானிடைசர் அடிக்கடி பயன்படுத்துதல், கைகளைக் கழுவுதல், ஆகியவை கொரோனா பரவலைத் தடுக்கும் முக்கியக் காரணிகள். இதை மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காற்றோட்ட வசதி
5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் பரிந்துரைக்கப்பட வில்லை. 6 முதல் 11 வயதுள்ள குழந்தைகள் அவர்களின் திறனைப் பொறுத்து, பாதுகாப்பாக முகக்கவசத்தை அணியலாம். பள்ளிகளில் வகுப்பறைகள் காற்றோட்டமாக இருக்க வேண்டும். ஏசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வகுப்பறைகளில் காற்றை வெளித்தள்ளும் பேன் பொருத்துவது கொரோனா பரவலைக் குறைக்கும்.
Recommended Video

உள்ளூர் நிலவரம்
மாணவர்கள் உணவுகளைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. கேண்டீன், உணவு உண்ணும் அறைகளில் நீண்ட நேரம் செலவிடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளின் உடல்நலன், கொரோனா அறிகுறிகளை கண்காணிக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். உள்ளூர் கொரோனா நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது மட்டும் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிடலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications