வருமான வரி சட்டத்தில் அதிரடி திருத்தம்.. வசூலித்த பணத்தை திருப்பி கொடுக்கப்போகும் மத்திய அரசு!
டெல்லி: மத்திய நிதியமைச்சகம் முன்தேதியிட்ட வருமான வரிச் சட்டப் பிரிவை நீக்கி புதிய வருமான வரிச் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2012ல் மத்திய நிதிஅமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது, முன்தேதியிட்ட வரிச் சட்ட திருத்தத்தை அறிமுகம் செய்யப்பட்டது. எனவே 2012ம் ஆண்டு மே 28க்கு முன்பு, அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அவற்றின் சொத்துக்களை விற்பனை செய்திருந்தாலும், மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக வோடபோன், கெய்ர்ன் எனர்ஜி உள்ளிட்ட 17 நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் வரி செலுத்தும் நிலைக்கு ஆளாகின.
இந்த வரி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வோடபோன், கெய்ர்ன் எனர்ஜி போன்ற நிறுவனங்கள் சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தன. இதில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதனால் 11 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியதை தவிர்த்தது வோடபோன்.
அதேநேரம், இந்த தீர்ப்பால், கெய்ர்ன் எனர்ஜியிடம் ஏற்கனவே வசூலித்த 9,300 கோடி ரூபாய் மற்றும் வட்டியுடன் வழக்குச் செலவாக 167 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் சிக்கியுள்ளது வருமான வரி துறை.

நிர்மலா சீதாராமன் தாக்கல்
இந்நிலையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2012க்கு முந்தைய அன்னிய சொத்து விற்பனைக்கு மூலதன ஆதாய வரி விதிக்கும் சட்டப் பிரிவை நீக்கும் வகையில் வரி சட்டங்கள் திருத்த மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்துள்ளார்.

நிறுவனங்களிடம் வசூலித்தது செல்லாது
அதாவது, ஏற்கனவே நிறுவனங்களிடம் அரசு வசூலித்த பணத்தை, வட்டியின்றி திரும்ப வழங்க இந்த சட்டம் வழி செய்கிறது. வோடபோன், கெய்ர்ன் உள்ளிட்ட 17 நிறுவனங்கள் இந்த புதிய மசோதாவால் பயனைடயும். மேலும் பல நிறுவனங்களும் இந்தியாவில் வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடையக் கூடும். ஆனால், நாட்டுக்கு கார்பொரேட் நிறுவனங்களிடமிருந்து வர வேண்டிய வரி வருவாய் தடைபடும்.

முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை
"கடந்த சில ஆண்டுகளில், நிதி மற்றும் உள்கட்டமைப்பு துறையில் பெரிய சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன, இது நாட்டில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இருப்பினும், இந்த முன்தேதியிட்ட வருமான வரி சட்டம் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக உள்ளது. கொரோனா தொற்றுநோய் காலத்திற்கு பிறகு பொருளாதாரம் விரைவாக மீட்கப்பட வேண்டிய தருணத்தில் நாடு இன்று உள்ளது. வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் வெளிநாட்டு முதலீடு முக்கிய பங்கு வகிக்க வேண்டியுள்ளது" என்று அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

கெய்ர்ன் எனர்ஜி கருத்து
இதுகுறித்து கெய்ர்ன் எனர்ஜி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், வரி விதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகமாகியுள்ளதை அறிகிறோம். இது நிதிச் சட்டம் 2012 மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட முன்தேதியிட்ட வரிவிதிப்பு நடவடிக்கைகளில் சில திருத்தங்களை முன்மொழிகிறது. நாங்கள் நிலைமையை கண்காணித்து பிறகு கருத்து தெரிவிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மோடி அரசு கொள்கை மாற்றம்
மத்திய நிதித்துறை செயலாளர் டிவி சோமநாதன் இதுபற்றி கூறுகையில், முந்தைய வரி சட்டத்தை பயன்படுத்தி மொத்தம், 8,100 கோடி வசூலிக்கப்பட்டது. இதில், கெய்ர்ன் எனர்ஜியிடம் 7,900 கோடி கிடைத்தது. இந்தப் பணம் திருப்பித் தரப்படும். 2014 ஆம் ஆண்டிலிருந்து (மோடி அரசு பதவியேற்றது முதல்) அரசின் கொள்கை என்னவென்றால், நாங்கள் முன்தேதியிட்ட வரிவிதிப்பை ஆதரிக்கவில்லை. இது இந்தியாவுக்கு நிறைய முதலீடு தேவைப்படும் நேரம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரி திரும்ப போகும்
வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் கூறுகையில் "முதலீட்டாளர் சமூகத்திற்கு உறுதியளிக்க இந்த துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளோம்." என்றார். "இந்தியாவின் இறையாண்மை உரிமையை நீங்கள் கேள்வி கேட்க முடியாது, ஆனால் கொள்கை அடிப்படையில், நாங்கள் முன் தேதியிட்ட வரி விதிப்பு வழக்குகளை தொடர மாட்டோம். இது 8,000 கோடி பற்றிய கேள்வி அல்ல (இது இந்த ரெட்ரோ வரி மூலம் வசூலிக்கப்பட்டது), அரசாங்கம் ரெட்ரோ வரிவிதிப்பை நம்பவில்லை என்பதைப் பற்றியது" என்று அவர் கூறினார். ஐசிஏஐ முன்னாள் தலைவர் வேத் ஜெயின், அளித்த பேட்டியில், இது வழக்கு பிரச்சினையை தீர்க்கும் என்றார். "முழு வரியும் திருப்பித் தரப்பட வேண்டும் ஆனால் வட்டி இல்லாமல்" என்பதுதான் இந்த சட்டத்தின் சாராம்சம் என்று தெரிவித்தார்.

நிறுவனங்கள் வரவேற்பு
இந்த மசோதா வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று டெலாய்ட் இந்தியாவின் பங்குதாரர் நீரு அஹுஜா கூறினார். "இந்தத் திருத்தம் பல வருடங்களுக்கு முன் செய்த தவறை சரிசெய்கிறது. அது இப்போது இல்லாமல் போய்விடும். இதனால், நிறைய சர்ச்சைகள் தீரும். இந்த மசோதா அறிமுகம் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும். இது அரசுக்கும், நிறுவனங்களுக்கும் சம வெற்றியை தரும். இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் "என்று அஹுஜா கூறினார். இந்த சட்டத் திருத்தத்தால் இழக்கும் பெரும் வருமானத்தை ஈடுகட்டும் அளவுக்கு புதிய முதலீடுகள் வருமா, என்பதைப் பொறுத்துதான், இதன் வெற்றி தோல்வி உள்ளது என்கிறார்கள், இந்திய நிதித்துறை சார்ந்த சில வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications