பாஜக அரசுக்கு எதிராக டெல்லியில் திரண்ட கர்நாடகா காங்கிரஸ்.. சித்தராமையா & எம்.பிக்கள் பங்கேற்பு!
டெல்லி: கர்நாடகா மாநிலத்துக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்து டெல்லியில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடகா எம்.பி.க்கள் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர்.
லோக்சபாவில் பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இப்பட்ஜெட்டில் கர்நாடகா மாநிலத்துக்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் குற்றச்சாட்டு.

கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், தென்னிந்திய மக்களின் வலியையும் வேதனையையும்தான் டிகே சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நாடு ஒரே தேசம்தான். ஆனால் நீங்கள் இந்தி பெல்ட் மாநிலங்களைத் தாண்டி பார்ப்பதே இல்லையே. மத்திய அரசின் பட்ஜெட்டில் சமமான நிதிப் பகிர்வு இல்லையே. மத்திய அரசுக்கு கர்நாடகா பெருமளவு வரி வருவாய் வசூலித்து வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு என முக்கியமான அறிவிப்புகள் எதுவுமே இந்த பட்ஜெட்டில் இடம் பெறவே இல்லையே. தென்னிந்திய மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவே கருதுகின்றனர். நாங்கள் இந்தியர்கள். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிராந்திய அடிப்படையிலான தனிநாடு கோரிக்கை பேச்சுகளுக்கே இடமில்லை என தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில் டிகே சிவகுமாரின் சகோதரர் காங்கிரஸ் எம்பியான டிகே சுரேஷ், மத்திய அரசால் தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் சூழ்நிலை நீடித்தால் அத்தனை தென்னிந்திய மாநிலங்களும் ஒருங்கிணைந்து இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து தனிநாடு கோரும் நிலைமை உருவாகும். எங்களிடம் வரி வசூல் செய்கிறது மத்திய அரசு. அப்படியானால் எங்களுக்கான உரிய பங்கைத்தான் தர வேண்டும். ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு அநீதி இழைத்து வருகிறது. ஒவ்வொரு விவகாரத்திலும் தென்னிந்தியாவுக்கு அநீதிதான் மத்திய அரசு இழைத்து கொண்டே இருக்கிறது. கர்நாடகா மாநிலமானது ரூ4 லட்சம் கோடிக்கும் அதிகமான வரி வசூல் செய்து மத்திய அரசுக்கு கொடுக்கிறது. ஆனால் மத்திய அரசு எங்களுக்கு எவ்வளவு திருப்பித் தருகிறது? நாட்டின் 16-வது நிதிக் குழு இது குறித்து கவனம் செலுத்தாமல் போனால் தென்னிந்திய மக்கள் தங்களது உரிமைக் குரலை எழுப்பவே செய்வார்கள் என்றார். டிகே சுரேஷின் இந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. டிகே சுரேஷின் இந்த கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் கிளம்பியது. பிரதமர் மோடியும் இதனை மறைமுகமாக கண்டித்து இருந்தார்.

இந்த நிலையில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது; கர்நாடகாவுக்கான உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என குற்றம்சாட்டி டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடகா மாநிலம் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். டெல்லியில் இன்று நடைபெறும் போராட்டத்தில் கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர். ஆனால் இப்போராட்டத்தை பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இப்போராட்டத்தில் பங்கேற்க கர்நாடகா அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் டெல்லி வந்தடைந்தனர். சித்தராமையா தலைமையில் தனி விமானத்தில் அனைவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு சமமான நிதிப்பங்கீட்டை வழங்கவில்லை என குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள். எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications