பொறுமையின் சிகரம்! 3 முறை மிஸ்ஸான முதல்வர் பதவி.. காங்., உச்சம் தொட்ட மல்லிகார்ஜூன கார்கே! வரலாறு
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கே சாதாரணமாக இந்த அந்தஸ்தை பெறவில்லை. 9 முறை எம்எல்ஏவாக இருந்த இவருக்கு கர்நாடகா முதல்வராக 3 முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சலித்து போகாத மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தியின் மீதான நம்பிக்கையில் கட்சிக்கும், தான் கொண்ட கொள்கைக்கும் விரோதமாக செயல்படாமல் தொடர்ந்து பொறுமை காத்து வந்தார்.
இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக அவர் மாறியுள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு:

மல்லிகார்ஜூன கார்கே வெற்றி
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17 ல் நடைபெற்றது. இதில் சோனியா காந்தியின் ஆதரவுடன் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து சசிதரூர் போட்டியிட்டார். தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 9900 பேர் ஓட்டளித்தனர். இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சோனியா காந்தி ஆதரவு பெற்ற வேட்பாளரான மல்லிகார்ஜூன் கார்கே 7,897 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசீதரூர் வெறும் 1,100 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 416 ஓட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

9 சட்டசபை தேர்தலில் வெற்றி
சோனியா காந்தியின் தீவிர விசுவாசியாக உள்ள மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகத்தின் கலபுரகியில் பிறந்தார். 1942ல் பிறந்த மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தற்போது வயது 80 ஆகும். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவரது அரசியல் வாழ்க்கை என்பது மிகவும் கடுமையாகவே இருந்தது. தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றாலும் கூட இவருக்கு பதவிகள் என்பது எட்டாக்கனியாகவே இருந்துள்ளது. அதாவது இவர் கடந்த 1972 முதல் 2008 வரை 1972, 1978, 1983, 1985, 1989, 1994, 1999, 2004, 2008 வரை நடந்த சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 9 முறை வெற்றி பெற்றார். 1980இல் குண்டுராவ் அமைச்சரவையில் அமைச்சரானார். அதன்பிறகு 1990ல் எஸ் பங்காரப்பா அமைச்சரவையில் 1992 முதல் 1994 வரை எம் வீரப்ப மொய்லி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். 1996-99ல் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். 2005 முதல் 2008 வரை கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டார். அதன்பிறகு 2009ல் தான் தேசிய அரசியலில் அவர் நுழைந்தார்.

3 முறை முதல்வர் பதவி மறுப்பு
முன்னதாக கர்நாடகா அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் மல்லிகார்ஜூன கார்கே 3 முறை முதல்வராக தேர்வாக வாய்ப்பு இருந்தது. ஆனால் இறுதி நிமிடங்களில் அந்த பதவி மற்றவர்களின் பக்கம் சென்றது. முதன் முதலாக கடந்த 1992ல் கர்நாடக முதல்வர் பதவிக்கான பட்டியலில் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயர் இருந்தது. ஆனால் இதில் வீரப்ப மொய்லி முதல்வரானார். அதன்பிறகு 1999 தேர்தலில் எஸ்எம் கிருஷ்ணா முதல்வராக தேர்வான போதும் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயர் முன்னிலையில் இருந்தது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் 2வது முறையாக அவரது முதல்வர் கனவு கலைந்தது. 3வது முறையாக 2004ல் ஜனதாதளம்-காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்தது. இதில் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாவட்டத்தை சேர்ந்தவரும், அவரது நண்பருமான தரம் சிங் முதல்வர் பதவியை பெற்றார். இதிலும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாய்ப்பு மறுக்கப்ட்டது.

காரணம் என்ன?
மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட பெரும்பலான அரசியல் விமர்சகள் குறிப்பிட்ட காரணத்தை தான் கூறினர். அதாவது தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தான் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதல்வர் பதவி கைநழுவி போனதாக பொதுவான பேச்சு என்பது கர்நாடகாவில் இன்று வரை தேர்தல் சமயங்களில் உலா வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கூட மல்லிகார்ஜூன கார்கே கட்சி மேலிடம் மீது அதிருப்தி அடையவில்லை. சோனியா காந்தி மீது நம்பிக்கையுடன் இருந்தார். இதையடுத்து 2009ல் நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். அதன்பிறகு 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் மக்களவையின் காங்கிரஸ் குழு தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே செயல்பட்டார். இதன்மூலம் தொடர்ந்து 11 தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

வெளிப்படையாக பேசிய கார்கே
தனக்கு 3 முறை முதல்வர் பதவி கைநழுவி விட்டு போனதை மல்லிகார்ஜூன கார்கேவே வெளிப்படையாக பலமுறை கூறியுள்ளார். குறிப்பாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸில் எம்எல்ஏவாக இருந்த உமேஷ் ஜாதவை பாஜகவினர் நிறுத்தினர். அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில் அதிருப்தியில் இருந்த உமேஷ் ஜாதவ் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. கட்சியில் அதிருப்தி அடைந்து உமேஷ் ஜாதவ் பாஜகவுக்கு தாவியது பற்றி 2019 தேர்தல் பிரசாரத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.

குறிக்கோள் தான் முக்கியம்
அப்போது, ‛‛எனக்கு 3 முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. இருப்பினும் நான் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டது இல்லை. விசுவாசமாகவே இருக்கிறேன். ஏனென்றால் கட்சியில் பதவியை தாண்டி சித்தாந்தம், குறிக்கோள் தான் முக்கியம். சிலர் பதவிகள் கிடைக்காவிட்டால் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் கட்சியில் இணைந்துவிடுகின்றனர்'' என பாஜகவையும் உமேஷ் ஜாதவையும் விமர்சனம் செய்தார். இருப்பினும் இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, உமேஷ் ஜாதவிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம் 9 சட்டசபை தேர்தல், 2 நாடாளுமன்ற தேர்தல் என மொத்தம் 11 தேர்தலில் தொடர் வெற்றி பெற்று தேர்தல் அரசியலில் தோல்வியை சந்திக்காத நபர் என்ற மல்லிகார்ஜூன கார்கேவின் பெருமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications