புதிய ஐடி விதிகள்.. 8 வாரம் டைம் கொடுங்க போதும்.. டவிட்டரின் திடீர் மாற்றம்.. காரணம் புதிய அமைச்சர்?
டெல்லி: மத்திய அரசின் புதிய ஐடி விதிகளுக்கு ஏற்ப முழு நேரக் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க எட்டு வாரங்கள் தேவை என ட்விட்டர் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய ஐடி விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய விதிகளை பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் பின்பற்றுவதாக அறிவித்துவிட்டன.
இருப்பினும் ட்விட்டர் நிறுவனம் ஐடி விதிகளைப் பின்பற்றத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சட்ட பாதுகாப்பை மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் விலக்கிக் கொண்டது.

புதிய ஐடி விதிகள்
மத்திய அரசின் ஐடி விதிகளின்படி புகார்களை விசாரிக்கக் குறைதீர்ப்பு அதிகாரியாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களில் இருக்கும் போஸ்ட்கள் பற்றிய புகார்களை விசாரித்து இவர்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும், ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெர்மி கேசல் என்பவரைக் குறை தீர்ப்பு அதிகாரியாக நியமித்தது.

டெல்லி நீதிமன்றம்
இது அப்போது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. மேலும், இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கும் தொடர்ந்திருந்தார். கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கில், குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கும் விவகாரத்தில் இன்னும் எவ்வளவு காலம்தான் எடுத்துக் கொள்வீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

8 வாரங்கள் தேவை
அதில், "இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை முழு நேரக் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க எங்களுக்கு 8 வாரங்கள் வேண்டும். இந்தியாவில் ஒரு அலுவலகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். புதிய ஐடி விதிகளின்படி இந்த அலுவலகம் எங்களின் நிரந்தர தொடர்பு அலுவலகமாக இருக்கும். அதேபோல புதிய ஐடி விதிகளுக்கு ஏற்ப முதல்கட்ட அறிக்கையை வரும் ஜூலை 11ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசு vs ட்விட்டர்
புதிய ஐடி விதிகள் விஷயத்தில் மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், அப்போது ஐடி அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் சில மணி நேரம் முடக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் புதிய அமைச்சரவையில் இருந்து ரவிசங்கர் பிரசாத் நீக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
அவருக்குப் பதிலாக அஸ்வினி வைஷ்ணவ் என்பவர் ஐடி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய சூழலில் டெக் நிறுவனங்களைச் சமாளிக்க மத்திய அரசுக்கு வலுவான ஒருவர் ஐடி துறை அமைச்சராகத் தேவைப்பட்டார். ஏற்கனவே பல கார்ப்ரேட் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அஸ்வினி வைஷ்ணவ் இதையும் சிறப்பாகக் கையாள்வார் என நம்பியே இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை அமைச்சராக நியமித்து ஒரே நாளில் ட்விட்டர் இந்த பதிலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications