அதிகரிக்கும் கொரோனா பரவல்.. குறைகிறதா பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அளவு? மத்திய அரசு திட்டம்?
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசிக்கும் இடையிலான கால அளவை குறைக்க தேசிய நோய்தடுப்பு ஆலோசனை கூழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 213 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 215ஆக உள்ளது.

கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 3 பேரும் மகாராஷ்டிராவில் 2 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்தனர். அதேபோல் தமிழகம், மேற்கு வங்கம், குஜராத், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் தலா ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 195.67 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மார்ச் 16ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஏப்ரல் 10ம் தேதி முதல் 18 முதல் 59 வயது வரை உள்ள பொதுமக்களுக்கு, கொரோனா வைரஸ் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தவணைதடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். ஆனால் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவதில் மக்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால அளவை குறைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நோய்க்கட்டுப்பாடு குழுவினர் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசிக்கும் இடையிலான கால அளவை 6 மாதமாக குறைக்க பரிந்துக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த இறுதி முடிவு வரும் ஜூன் 29ஆம் தேதி எடுக்கப்படவுள்ளது.
முன்னதாக வெளிநாடு செல்வோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசிக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசிக்குமான கால அளவை, 90 நாட்களாக மத்திய அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications