பஞ்சாப் தேர்தல்..ஆட்சியை தக்க வைக்குமா காங்.? கடும் போட்டி தரும் ஆம் ஆத்மி.. பாஜக எங்கே? NewsX சர்வே
டெல்லி: அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று Polstrat-நியூஸ் எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

பஞ்சாப் கள நிலவரம்
இதன் காரணமாகவே அதிக எதிர்ப்பு இருந்ததால் அமீர்ந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக்கப்பட்டார். பஞ்சாபில் சுமார் 30% பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதல்வராகத் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்துள்ளது மாஸ்டர் ஸ்ரோக் எனப் பல அரசியல் வல்லுநர்களும் தெரிவித்தனர். இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள Polstrat- நியூஸ் எக்ஸ் சர்வே பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்க வாய்ப்பில்லை என்றே தெரிவித்துள்ளது.

கடும் போட்டி
இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில், 35.20% வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி 40-45 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆம் ஆத்மி கட்சி 38.83% வாக்குகளுடன் 47-52 இடங்களை கைப்பற்றி நூலிழையில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக எங்கே
இந்த இரு கட்சிகளுக்கு அடுத்து 21.01% வாக்குகளுடன் அகாலி தளம் 22-26 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக 2.1% வாக்குகளைப் பெற்று வெறும் 1-2 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய பிரச்சினைகள்
Polstrat- நியூஸ் எக்ஸ் இணைந்து நடத்திய இந்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் 35.70% பேர் அமரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து விலகிய முடிவை ஆதரிக்கவில்லை. அதேநேரம் 27.50% பேர் அவர் எடுத்தது சரியான முடிவு எனக் குறிப்பிட்டுள்ளனர். 39.20% பேர் வேலைவாய்ப்பே முக்கியப் பிரச்சினையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 19.90% பேர் மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது விவசாய சட்டங்கள் முக்கிய பிரச்சனை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

விவசாய சட்டங்கள்
விவசாய சட்டங்களைப் பொறுத்தவரை சுமார் 59.90% பேர் அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதை முழுமையாக ஆதரிக்கின்றனர். வெறும் 14.30% பேர் மட்டுமே சட்டங்களை ரத்து செய்து இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் சுமார் ஓராண்டு போராடிய பின்னரே, விவசாய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முதல்வர்
அடுத்து முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு சுமார் 33% பேர் பஞ்சாபிற்கு புதிய முதல்வர் தேவை எனத் தெரிவித்துள்ளனர். முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு ஆதரவாக 22% பேரும் கேப்டன் அமரீந்தர் சிங்க்கு ஆதரவாக 16% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரம் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 9.80% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம் அகாலி தளம் கட்சியின் சுக்பீர் சிங் பாதலுக்கு 17.70% பேர் ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications