80, 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்.. ஏக்கம் தீர்த்த ‛ரஸ்னா’ குளிர்பான உரிமையாளர் மரணம்.. சோகம்-யார் இவர்?
டெல்லி: 80, 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் குளிர்பானமாக இருந்த ரஸ்னாவின் உரிமையாளர் ஆரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டா மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவருக்கு இணையதளத்தில் ‛ரஸ்னா' எனும் ஹேஸ்டேக்கில் 80, 90ஸ் கிட்ஸ்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது வெவ்வேறு விதமான குளிர்பானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதற்கு முன்பு அதாவது 1980, 1990 காலக்கட்டத்தில் கிராமங்கள், நகரங்கள் முழுவதும் பிரபலமாக இருந்த குளிர்பானம் என்றால் ரஸ்னா என்பதை மறுக்க முடியாது.
இந்த 80ஸ், 90ஸ் ஆண்டுகளில் தொலைக்காட்சிகளில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பான விளம்பரங்களை பார்க்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் குழந்தைகளுக்கெல்லாம் ஒருமுறையாவது இதனை சுவைப்போமா? என்ற ஏக்கம் ஏற்பட்டிருக்கும். இத்தகைய ஏக்கத்தை போக்கும் வகையில் அறிமுகம் ஆனது தான் இந்த ரஸ்னா.

ஐ லவ் ரஸ்னா விளம்பரம்
பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானத்துக்கு நிகரான சுவை, விலையும் குறைவு, சாதாரண கடைகளில் கிடைக்கும் வகையிலான மார்க்கெட்டிங் என்பது தான் இந்த ரஸ்னாவின் ஸ்பெஷாலிட்டி. இதுதான் ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த 80ஸ், 90ஸ் கிட்ஸ்களை ரசிக்க வைத்து ரஸ்னாவை அதிகமாக ருசிக்கவும் வைத்தது. குறிப்பாக மஞ்சள் நிற ரஸ்னாவை கண்ணாடி குவளையில் கையில் வைத்து கொண்டு ‛ஐ லவ் ரஸ்னா' என பால்வடியும் முகத்தில் பச்சிளம் குழந்தை கூறும் விளம்பரத்துக்கு ரசிகராக கிட்ஸ்களே அப்போது இல்லை என்றால் மிகையாது.

32 கிளாஸ் ரஸ்னா
வெறும் 5 ரூபாய்க்கு கிடைக்கும் ரஸ்னா பாக்கெட்டை வாங்கி தண்ணீருடன் சேர்ந்து கலக்கினால் போதும். 32 கிளாஸ் ரஸ்னா ரெடி. பெரிய வேலைப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருப்பதால், ‛‛நான் தான் ரஸ்னா தயாரிப்பேன்.. நான் தான் ரஸ்னா தயாரிப்பேன்'' என சகோதர-சகோதரிகள் இடையேயான சண்டைக்கு மத்தியிலேயே சில நிமிடத்தில் அட.. அட.. இனிப்போடு இனிமையான ரஸ்னாவை ரெடியாக்கி விடலாம். குறிப்பாக கோடை வெயிலில் வாட்டி வதைக்க சூரியனை கண்டுக்கொள்ளாமல் கால்கடுக்க ஓடி, ஆடி விளையாடி ஓய்வுக்காக வீட்டுக்கு வந்தால் உலர்ந்து போன உதடுகள் உடனே தேடுவது இந்த ரஸ்னாவை தான்.

இணையத்தில் டிரெண்ட்
இவ்வாறு 80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் குளிர்பானமாக இருந்த இந்த ரஸ்னா தான் நேற்று முன்தினம் முதல் இன்று வரை அவ்வப்போது இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது. என்ன இது என்று பார்க்கவே, ரஸ்னாவின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது.

மாரடைப்பால் உரிமையாளர் மரணம்
ஆம் ஏழைகளின் குளிர்பானத்தை தயாரித்து இந்தியா முழுவதும் வினியோகம் செய்த ரஸ்னாவின் நிறுவனரான அரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டா மாரடைப்பால் மறைந்துள்ளார். குஜராத்தை சேர்ந்த இவருக்கு வயது 85. இவர் சனிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்த நிலையில் திங்கட்கிழமை தான் வெளியுலகிற்கு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அன்று முதல் இன்று 3வது நாளாக இணையதளத்தில் ரஸ்னா எனும் ஹேஸ்டேக்கில் அரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டாவுக்கு 80ஸ், 90ஸ் கிட்ஸ்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் தான் தற்போது ரஸ்னா எனும் ஹேஸ்டேக் டிரெண்டாகி உள்ளது.

யார் இந்த உரிமையாளர்?
ரஸ்னாவை அறிமுகம் செய்த ஆரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டா தனது தந்தை பிரோஜா கம்பட்டாவில் இருந்து பெற்ற நிறுவனத்தை குளிர்பான நிறுவனமாக புகழ்பெற செய்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பியோமா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தில் முதலில் ‛ஜாபே' என்ற பெயரில் குளிர்பானம் தயாரித்தார். இது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பிரபலமானாது. இதையடுத்து இது டாடா குழுமத்தின் வோல்டாஸ் நிறுவனத்தால் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. இருப்பினும் பிற மாநிலங்களில் விற்பனையை செயல்படுத்துவில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன.

11 விதமான சுவைகளில்...
இதையடுத்து தான் விளம்பர ஏஜென்சியான ஓகில்வி மற்றும் மாதர் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் ஜாபே எனும் குளிர்பானத்துக்கு ரஸ்னா என பெயரிடப்பட்டது. இது கடந்த 1984 முதல் 2005 காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் பிரபலமானது. 80ஸ், 90ஸ் கிட்ஸ்களில் பேவரைட் குளிர்பானமாகி போனது. மொத்தம் 11 விதமான சுவைகளில் ரஸ்னா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை இந்த குளிர்பானம் இந்தியா உள்பட 50க்கும் அதிக நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் தனித்துவ சுவையால் மறக்க முடியாத குளிர்பானமாக மாறிய இந்த ரஸ்னா இன்று வரை மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள நிலையில் தான் அதனை அறிமுகம் செய்த ஆரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டா மறைந்து போய் உள்ளார் என்பது குறிப்பிடத்துக்கது.












Click it and Unblock the Notifications