குழந்தைகளின் உயிரை கொல்லும் கொரோனா... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உயிரைப் பறிக்கும் MIS - C என்ற பாதிப்பு ஏற்படுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வைரஸ் பரவல் குறைந்துள்ளது.
இது மிகவும் புதிய வகை வைரஸ் என்பதால் இது குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஆய்வுகள் மூலமே இந்த வைரசின் தீவிரதன்மையை உணர முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையாகப் பாதிக்கும்
வைரஸ் பரவ தொடங்கிய காலத்தில், இது முதியவர்களை மட்டுமே தாக்கும் என்றும் கருதப்பட்டது. ஆனால், அது விரைவிலேயே பொய்யான ஒரு தகவல் என்று தெரியவந்தது. அதேபோல இந்த வைரஸ் குழந்தைகள் மத்தியில் தீவிரமாக இருக்காது என்றும் கூறப்பட்டது. அதாவது கொரோனா வைரஸ் குழந்தைகளை தாக்கினாலும் அதன் அறிகுறிகள் கூட தெரியாது என்றும் குழந்தைகள் மத்தியில் மிகவும் குறைவான பாதிப்பையே கொரோனா ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உயிரிழக்கும் குழந்தைகள்
இந்நிலையில், பெரும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக நாடு முழுவதும் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான MIS - C என்ற கொடிய நோய் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. தலைநகரிலுள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் மட்டும் சுமார் 140 குழந்தைகள் இந்த நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 வயதுக்குக் குறைவான இருவரும் 12 வயதுக்குக் குறைவான ஒரு குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

MIS - C என்றால் என்ன
Multisystem Inflammatory Syndrome in Children என்று அழைக்கப்படும் MIS - C என்ற நோய் குழந்தைகளைத் தாக்கும் மிகவும் ஆபத்தான ஒரு நோயாகும். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும், அதைத்தொடர்ந்து இதயம், நுரையீரல் மற்றும் மூளை போன்ற பல உறுப்புகள் செயலிழக்க தொடங்கும். இந்த நோயால் பாதிக்கப்படும் சுமார் 60% குழந்தைகளுக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. கண் சிவத்தல், தடிப்புகள், குறைந்த ரத்த அழுத்தம், காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

சரியான நேரத்தில் கண்டறிய வேண்டும்
இது குறித்து குழந்தைகள் சிறப்பு மருத்துவர் டிரின் குப்தா கூறுகையில், "குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டால் இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படும். ஒன்று நிமோனியா மற்றொன்று இந்த MIS - C. இதைச் சரியான நேரத்தில் கண்டறிந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும், மேலும், நகர் புறங்களில் உள்ள மருத்துவமனைகளால் மட்டுமே இதைக் கண்டறிய முடியும் என்பதால் நாடு முழுவதும் இது தொடர்பாக மருத்துவமனையில் பதிவு செய்யப்படும் வழக்குகள் மிகவும் குறைவாகவே உள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.