குஜராத் தேர்தலில் வெல்ல காங்கிரஸ் நம்பும் ஒரே முகம் "நரேஷ்.." என்ன நிபந்தனை விதித்தார் தெரியுமா?
டெல்லி : நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு காய் நகர்த்த தொடங்கி இருக்கிறது.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சியினரிடமே அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
2019 மக்களவைத் தேர்தல் படுதோல்விக்கு பிறகு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட பிளவு, 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெரிதாக தொடங்கி இருக்கிறது. இது காந்தி குடும்பத்தினருக்கு எதிரான அலையாகவும் உருவெடுத்து இருக்கிறது.

காந்தி குடும்பத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், தங்கள் தலைமையை தொடர்ந்து தக்க வைக்கவும் காந்தி குடும்பத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல்.

ஜிக்னேஷ் மேவானியால் கூடுதல் பலம்
இதற்கான முன்னேற்பாடுகளை கையில் எடுத்திருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி, பட்டியல் சமுதாய தலைவரும் பிரதமர் மோடியின் தொகுதியிலேயே சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானவருமான ஜிக்னேஷ் மேவானி இம்முறை தங்கள் கட்சியில் இணைந்து இருப்பது கூடுதல் பலத்தை தரும் என நம்புகிறது.

யார் அந்த ஒற்றை முகம்?
அதுமட்டுமில்லாமல் அங்கு பெருவாரியாக வசிக்கும் பட்டேல் சமுதாய மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது காங்கிரஸ். ஹர்திக் பட்டேலின் ஆதரவை கடந்து அதன் துணை சாதிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களை கட்சியில் சேர்க்க முயன்று வருகிறது. அதன் வெளிபாடாகவே பிரபல தொழிலதிபரும் லேவா பட்டேல் சமுதாய தலைவருமான நரேஷ் பட்டேலை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது காங்கிரஸ்.

நரேஷ் பட்டேலின் ஒற்றை நிபந்தனை
லேவா பட்டிதார் அமைப்பின் தலைவரும் கோடியார் கோவிலை நிர்வகித்து வரும் கோடல்தாம் கோவில் அறக்கட்டளையின் தலைவருமான நரேஷ் பட்டேல் குஜராத்தில் மிகப்பிரபலமான முகமாக அறியப்படுகிறார். இவரை தங்கள் கட்சியில் சேர்த்தால் பாஜகவுக்கு நெருக்கடி தர முடியும் என்பது காங்கிரஸின் நம்பிக்கை. காங்கிரஸின் அழைப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ள நரேஷ் பட்டேல், ஒரு நிபந்தனையை விதித்து இருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் வேண்டும்
அதுதான், தமிழ்நாடு, மேற்குவங்கத்தைபோல் குஜராத்தில் பிரசாந்த் கிஷோரை வைத்து தேர்தல் வியூகங்களை காங்கிரஸ் வகுக்க வேண்டும் என்பது. பிரஷாந்த் கிஷோரும் குஜராத் காங்கிரஸின் முகமாக பட்டேலை முன்னிருத்த வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு
ஏற்கனவே பிரஷாந்த் கிஷோருக்கும் காங்கிரஸுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய சூழலில் பிரஷாந்த் கிஷோர் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், பிரஷாந்த் கிஷோரும் நரேஷ் பட்டேலும் கூட்டு வைத்துக்கொண்டு செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications