அரசியல் சாசன அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பறித்துக்கொண்டது.. மத்திய சட்ட அமைச்சர் புது குற்றச்சாட்டு
டெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதியின் பேட்டியை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த பேட்டியில், "உச்சநீதிமன்றம் தனது நீதிபதிகளை தானே நியமித்துக்கொள்வதன் மூலம் அரசியல் சாசனத்தை பறித்துக்கொண்டுவிட்டது" என்று விமர்சித்துள்ளார்.
நீதித்துறை நீதி வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நீதிபதிகளை நியமிப்பதை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் என்று சமீபத்தில் கிரண் ரிஜிஜூ கூறியிருந்தது பெரும் சர்சசையை ஏற்படுத்தியிருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த அவர், "1993ம் ஆண்டு வரை நீதிபதிகள் நியமனம் என்பது சட்டத்துறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்றது.
அக்காலகட்டங்களில் நாடு சிறப்பான நீதிபதிகளை கொண்டிருந்தது. ஆனால் தற்போது கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இதனை நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். அதேபோல தங்கள் சசோகதரர்களையே சக நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவில்தான் நிகழ்கிறது. கொலிஜியம் அமைப்பால் அதில் இருக்கும் நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகளுக்கு நீதியை வழங்குவதுதான் பிரதான பணி" என்று கூறியிருந்தார்.

கொலீஜியம்
மேலும், "நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையானது 5 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நமது நீதிபதிகள் சக நீதிபதிகளை நியமிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே நீதிபதிகள் நீதி வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார். இத்துடன் நில்லாமல் இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அதில், "கடந்த 25 ஆண்டுகளாக கொலீஜியம் முறையின் கீழ் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நீதிபதிகள் நியமன விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வையும் ஊக்குவிக்க அரசு விரும்புகிறது. எனவே கொலிஜியம் குழுவில் அரசு பிரதிநிதிகளை சேர்க்க அரசு பரிந்துரைக்கிறது" என்று கூறியிருந்தார்.

சர்ச்சை
கொலீஜியத்திற்கு எதிராக இவர் கூறி வரும் கருத்துக்கள் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ், சிபிஎம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி கூட மத்திய அரசுக்கு இது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கடந்த 16ம் தேதி அவர் தனது டிவிட்டர் பக்கதில், "மோடி அரசால் சீனாவின் ஆக்கிரமிப்பு பிரச்னையையோ, பொருளாதாரத்தையோ சரி செய்ய முடியவில்லை. ஆனால், விசுவாசமான நீதிபதிகளை நியமிக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடிக்கொண்டிருக்கிறது. இதனை ஆட்சி என்று சொல்வதா? அல்லது ரௌடியிசம் என்று சொல்வதா?" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

ஆதரவு
மேலும், "நமது அரசியலமைப்பின் 217 வது பிரிவைப் படிக்க பிரதமருக்கு நான் வலியுறுத்துகிறேன். இது சமஸ்கிருதத்திலும், இந்தியிலும் கூட பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இதை ஏன் படிக்க வேண்டும் எனில், மத்திய அரசு குடியரசுத் தலைவர் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து மட்டுமே முடிவு செய்ய முடியும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பொறுத்தவரை, அவர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட தனிக்குழுதான் நியமிக்கும்" என்று கூறியிருந்தார். ஆக இப்படியாக ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில், மீண்டும் சர்ச்சையை உருவாக்கும் விதமாக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதியின் பேட்டியை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

வீடியோ
அதில், "சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது. நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை. ஏனெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களால் மட்டுமே சட்டத்தை இயற்ற முடியும். அந்த வகையில் நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியல் சாசனத்தை திருத்தம் மேற்கொள்ள முடியும். ஆனால் முதன் முறையாக நீதிமன்றங்கள் எல்லை தாண்டி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பறித்துள்ளதாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து, "இது ஒரு நீதிபதியின் குரல். பெரும்பாலான மக்கள் இதே பார்வையைதான் கொண்டுள்ளனர்" என்று கூறியுள்ளார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications