அட சூப்பர்.. உலக அளவில் அறிவியல் ஆய்வுகளில் முன்னேறிய இந்தியா.. எத்தனையாவது இடம் தெரியுமா?
டெல்லி: அறிவியல் ஆய்விதழ்களை வெளியிடுவதில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அறிவியல் ஆய்வுகள் கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் 'அறிவியல் மற்றும் பொறியியல் குறிகாட்டிகள் 2022' எனும் அறிக்கையை சுட்டிக்காட்டி இத்தகவல்களை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையை பொறுத்த வரையில் கடந்த பத்தாண்டுகளில் அறிவியல் ஆய்விதழ்கள் அதிகம் வெளியிடுவது, புதிய ஆய்வுகளை மேற்கொள்வது போன்ற பணிகளை இந்தியா சிறப்பாக செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

முன்னேற்றம்
இது குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "கடந்த 2010ம் ஆண்டு இந்தியா இந்த விவகாரங்களில் 7வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். அதாவது 2010ம் ஆண்டு 60,555 அறிவியல் ஆய்வுதாள்கள் வெளியாகின. ஆனால் 2020ல் சுமார் 1.50 லட்சம் ஆய்வு தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல அறிவியல் மற்றும் பொறியியலில் முனைவர் பட்டம் பெறும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா அதிக அளவில் காப்புரிமையை வழங்கியுள்ளது. நாட்டில் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நிதி ஒதுக்கீடு
2018-2019ம் ஆண்டு 2,511 காப்புரிமைகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து 2019-2020ம் ஆண்டு 4,003, 2020-2021ம் ஆண்டு 5,629 என இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறனில் இந்தியாவின் செயல்திறன் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக மேம்பட்டிருப்பதை இந்த தகவல்கள் உறுதி செய்துள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கும்" என்று அமைச்சர் கூறியுள்ளார். கடந்த 19 ஆண்டுகளை பொறுத்த அளவில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறைக்கு இந்தியா தொடர்ந்து கூடுதல் தொகையை ஒதுக்கி வருகிறது. ஆனால் இது போதுமானதாக இல்லையென்று துறை சார்ந்த வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

அமெரிக்கா
இந்த துறையில் தற்போது வரை அமெரிக்காதான் அதிக தொகையை ஒதுக்கியுள்ளது. இதனால்தான் அமெரிக்காவை மையப்படுத்தி தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகள் உருவாகியுள்ளன. இதனையடுத்து சீனா இவ்வாறு அதிக தொகையை ஒதுக்கியுள்ளது. இந்தியாவை பொறுத்த அளவில் உலக அளவில் இந்த துறைக்கு அதிக செலவுகளை செய்யும் முதல் 8 நாடுகளின் வரிசையில் இந்தியா 7வது இடத்தில் இருக்கிறது. இவ்வாறு செய்யப்பட்ட செலவுகள் குறித்த தரவுகள் 2019ம் ஆண்டுக்கானதை உலக நாடுகள் அனைத்தும் பகிர்ந்துகொண்டுள்ளன. ஆனால் இந்தியா 2018ம் ஆண்டுடன் இதனை நிறுத்திக்கொண்டது. காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகி வரும் இடர்பாடுகளை எதிர்கொள்ள இது குறித்து தொடர் ஆய்வுகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த ஆய்வுகளை தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வலியுறுத்தல்
குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் இந்த ஆய்வுகளுக்கான அவசியத்தை உலக நாடுகள் உணர்ந்திருக்க வேண்டும். தொற்று பாதிப்பை எதிர்கொண்ட பின்னரும் கூட இந்த துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, அல்லது போதிய நிதியை ஒதுக்காமல் இருப்பது மனித இனத்தின் மீதான அக்கறையின்மையை வெளிக்காட்டுவதாகும். எனவே உலக நாடுகள் இதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இனி வரும் காலங்களில் நாம் கொரோனாவைவிட பெரிய சவால்களை எதிர்கொள்ள இருக்கிறோம் என்று சமீபத்தில் உலக சுகாதார துறை அமைப்பினர் தலைவர் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications