20 ஆண்டுகளில் முதல் முறை! எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுக்கு எத்தாதண்டி பங்களா! ஊதியம் எவ்வளவு?
டெல்லி: லோக்சபா தேர்தலில் 99 தொகுதிகள் பெற்ற காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதையடுத்து அதன் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடைக்க போகும் சலுகைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
கடந்த 2004 முதல் 20 ஆண்டு அரசியல் வாழ்வில் ராகுலுக்கு முதல்முறையாக இந்த உயர் பதவி கிடைத்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது மத்திய அமைச்சருக்கு இணையான அந்தஸ்தை பெற்றுள்ளது. தற்போது ராகுலுக்கு டெல்லியில் டைப் 8 குடியிருப்பு கிடைக்கும். இதன் பரப்பளவு 8,250 சதுர அடியாகும். தனி வளாகத்தின் நடுவே வெள்ளை மாளிகை போல் அமைந்துள்ள இந்த பங்களாவில் வரவேற்பறை, படுக்கையறைகள், என மொத்தம் 7 அறைகள் உள்ளன.
இங்கு பணியாற்றும் உதவியாளர்களுக்கும் அங்கேயே 4 தனி குடியிருப்புகள் உள்ளன. இங்கு அரசு செலவில் சோஃபா, மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவை அளிக்கப்படும். இதுபோன்றதொரு பங்களாவின் மதிப்பு ரூ 100 கோடியாகும். வாடகைக்கு சென்றால் லட்சங்களைத் தாண்டும்.
இது போன்ற பங்களாவில் ராகுல் வசிப்பது இப்போது புதிது கிடையாது. முன்பு அவருடைய பாட்டி இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது பிரதமர் இல்லத்தில் ராகுல் வசித்துள்ளார். தந்தை ராஜீவ் காந்தி பிரதமரான போதும் அங்கு வசித்துள்ளார். அது போல் ராகுலின் தாய் சோனியா காந்திக்கும் இது போன்று பிரம்மாண்டமாக ஒரு அரசு பங்களா கொடுக்கப்பட்டுள்ளது.
ரேபரேலி எம்பியாக தேர்வான ராகுல் வசிக்கும் துக்ளக் சாலை வீடும் இதே டைப் 8 வகையை சேர்ந்ததுதான். இரண்டும் ஒரே விதம் என்பதால் அவர் துக்ளக் சாலை பங்களாவுக்கு குடி போவாரா இல்லை புதிய பங்களாவுக்கு செல்வாரா என தெரியவில்லை.
எம்பியான ராகுலுக்கு 2 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கிறது. அது தற்போது ரூ 3.3 லட்சமாக கிடைக்கும். எதிர்க்கட்சித் தலைவருக்கு மாத செலவுகளும் வழங்கப்படும். மேலும் அரசு சார்பில் 14 உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் இதுவரை கிடைத்து வந்த எம்பிக்கான சலுகைகள் கிடைக்காது.
கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது என ராகுல் காந்தி புகார் தெரிவித்து வந்தார். ஆனால் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டதால் அவர் இனி அனைத்து விவகாரங்கள் மற்றும் மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசுவதற்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
லோக்சபாவுக்கு ராகுல் 5ஆவது முறையாக தேர்வாகியுள்ளார். அவருக்கு இளம்வயதிலேயே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்துவிட்டது. லோக்பால் தலைவர், சிபிஐ இயக்குநர், தேர்தல் ஆணையர், மத்திய தகவல் ஆணையர், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை நியமிப்பதற்கான தேர்வுக் குழுவிலும் பிரதமருடன் எதிர்க்கட்சித் தலைவரும் இருப்பார்.


Click it and Unblock the Notifications
