"அந்த 20 நிமிடங்கள்.." ஒடிசாவில் அடுத்தடுத்து மோதிய 3 ரயில்கள்.. உண்மையில் என்ன நடந்தது? பரபர தகவல்
டெல்லி: ஒடிசா மாநிலத்தில் சில நிமிட இடைவெளியில் மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதற்கிடையே அந்த விபத்து குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் மிக மோசமான ஒரு ரயில் விபத்து இப்போது அரங்கேறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டில் இல்லாத வகையில் மிக மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.
விடிய விடிய இதன் மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இதுவரை இந்த விபத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல நூறு பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12841) தினசரி மேற்கு வங்கம் கொல்கத்தாவில் இருந்து வாரத்திற்கு ஆறு முறை இயக்கப்படும் ரயிலாகும். கிழக்கு கடற்கரை வழியாக இயங்கும் இது முக்கியமான ரயில்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த ரயில் நேற்று மாலை 3.20 மணிக்கு வழக்கம் போல கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் வழக்கம் போலவே கூட்டம் அதிகமாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. இது ஒடிசா, ஆந்திரா வழியாக மறுநாள் சென்னை வந்தடையும்.
நேற்று மாலை இந்த ரயில் மாலை பாலசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் என்ற ரயில் நிலையம் அருகே வந்த போது விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகள் படுவேகமாக நடந்து வந்தது.
சில பிரச்சினைகள் இருந்த நிலையில், அதையும் தாண்டி மீட்புப் பணிகள் நடைபெற்றன. சுமார் 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அருகே இருந்த அனைத்து மருத்துவமனைகளிலும் இவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கொடூர விபத்திற்கு உலகளவில் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
3 ரயில்கள்: சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதே இதை மோசமான விபத்தாக மாற்றியுள்ளது. இதற்கிடையே இந்த விபத்து குறித்த முக்கிய டைம்லைன் வெளியாகியுள்ளது. அதாவது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல மாலை 3.20 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து கிளம்பியுள்ளது. அதில் எந்தவொரு தாமதமும் ஏற்படவில்லை. அதேபோல அந்த ரயில் பாலசோர் ரயில் நிலையத்திற்கு அட்டவணைப்படி 6.30 மணிக்கு வந்துள்ளது.
அங்கிருந்து ரயில் புறப்பட்டு சுமார் 30 நிமிடங்களில் இந்த ரயில் விபத்தில் சிக்கியதாகத் தெரிகிறது. மெயின் பாதையில் செல்ல கோரமண்டல் எக்ஸ்பிரசுக்கு பச்சை சிக்னல் தரப்பட்ட நிலையில், அது உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குள் ரயில் சென்றுவிட்ட நிலையில், அது லூப் டிராக்கில் சென்றுவிட்டது. லூப் டிராக்கில் அப்போது சரக்கு ரயில் இருந்த நிலையில், அதன் மீது இது மோதியுள்ளது.
என்ன நடந்தது: இந்த விபத்து நேற்று மாலை சுமார் 7 மணியளவில் நடந்துள்ளது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் மெயின் தடத்தில் விழுந்துள்ளது. அப்போது 20 நிமிடங்கள் கழித்து வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயில் ஒட்டுநருக்கு இது குறித்து தெரியப்படுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயில் மெயின் டிராக்கில் வரவே அங்கே இருந்த, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது மோதி யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயிலும் தடம் புரண்டுள்ளது.

இந்த விபத்து 7.20 மணியளவில் நடந்ததாகத் தெரிகிறது. அதாவது முதலாம் விபத்து நடந்து 20 நிமிடங்களுக்குப் பின்னர் வந்த ரயிலுக்கும் கூட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து குறித்துத் தெரியப்படுத்தாதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது முதற்கட்ட தகவல்கள் தான். இந்த விபத்து குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கூடுதல் தகவல்கள் தெரிய வரும் எனத் தெரிகிறது.
இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சுமார் 10 பெட்டிகள் தடம் புரண்டன. அதேபோல அடுத்து வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயிலில் 2 முதல் 3 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிகிறது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications