அடப்பாவமே! ஒவ்வொரு வாரமும் ரூ.3000 கோடி இழந்த அதானி.. மொத்தம் 2.8 லட்சம் கோடி போச்சு! அம்பானி எங்கே
டெல்லி: உலகின் டாப் பணக்காரர்களும் கூட கடந்த ஓராண்டில் குறிப்பிட்ட அளவுக்குச் சொத்துகளை இழந்துள்ளனர். அவர்கள் எந்தளவுக்குச் சொத்துகளை இழந்துள்ளனர். குறிப்பாக இந்தியர்கள் எங்கே உள்ளனர் என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் என்பது மிக மோசமான ஒன்றாகவே உலக நாடுகளுக்கு இருந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
கொரோனா காலத்திற்குப் பிறகு வி- ஷேப்பில் தான் ரிக்கவரி இருந்ததாகக் கூறப்பட்டது. அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆனதாகப் புகார்கள் இருந்தது.

பெரும் பணக்காரர்கள்
இருப்பினும், அதுவும் கூட நீண்ட காலம் நீட்டிக்கவில்லை. இப்போது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் பெரும் பணக்காரர்களுக்கும் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் பங்குகள் மற்றும் முதலீடுகளின் மதிப்புகள் குறைந்துள்ள நிலையில், பணக்காரர்களின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது. இதற்கிடையே இது குறித்த தகவல்களை 2023 M3M Hurun Global Rich List என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

குறையும் சொத்து
அதில் உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 8% குறைந்துள்ளது.. 2022ஆம் ஆண்டு உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3,381ஆக இருந்த நிலையில் அது இப்போது 3,112 ஆகக் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பும் ஒரே ஆண்டில் 10% குறைந்து $13.7 டிரில்லியன் ஆக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. டாப் இடங்களில் உள்ள கோடீஸ்வரர்களின் மதிப்பும் கூட கணிசமான அளவுக்குக் குறைந்தே இருக்கிறது.

அதிக சொத்துகளை இழந்தோர்
இதில் அதிகபட்சமாக அமேசன் நிறுவனர் ஜெப் பெசோஸ் 70 பில்லியன் டாலர் இழந்துள்ளார். இதன் மூலம் இப்போது அவரது சொத்து மதிப்பு 118 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அவருக்கு அடுத்து எலான் மஸ்க் 48 பில்லியன் டாலரை இழந்துள்ளார். மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பு 157 பில்லியன் டாலராக உள்ளது. அடுத்து செர்ஜி பிரின் 41 மில்லியன் டாலர் (தற்போதைய சொத்து மதிப்பு 75 மில்லியன்) லேரி பேஜ் 44 பில்லியன் (தற்போதைய சொத்து மதிப்பு 72 மில்லியன்), மெக்கன்சி ஸ்காட் 35 பில்லியன் (தற்போதைய சொத்து மதிப்பு 26 மில்லியன்) இழந்துள்ளனர்.

அதானி- அம்பானி
இதில் ஆறாவது இடத்தில் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையைத் தொடர்ந்து சொத்து மதிப்பை இழந்த அதானி இதில் 6ஆவது இடத்தில் உள்ளார். ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 28 பில்லியன் டாலர் (சுமார் 2.8 லட்சம் கோடி) குறைந்து 53 பில்லியனாக உள்ளது. அடுத்த இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். அவர் 21 பில்லியன் டாலரை இழந்துள்ளார். இருப்பினும் அவரது சொத்து மதிப்பு 82 பில்லியனாக உள்ளது. அதானி ஆய்வறிக்கைக்குப் பின்னர், அதானி குழும நிறுவன பங்குகளின் மதிப்பு மளமளவெனச் சரிந்தது. இந்தியாவின் டாப் பணக்காரர் என்ற பட்டத்தையும் அவர் அம்பானியிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது. அதானி கடந்தாண்டு ஒவ்வொரு வாரமும் 3000 கோடி இழந்துள்ளார்.

இந்தியா
கடந்த ஓராண்டில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 28 பேர் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்தியாவில் இப்போது 187 பில்லியனர்கள் உள்ளனர். சீனாவும் அமெரிக்காவும் இன்னும் இந்தப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மொத்த பில்லியனர்களில் 53% இந்த இரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவின் 187 பில்லியனர்களில், 5 பேர் டாப் 100 இடங்களுக்குள் உள்ளனர். அவர்களில் 30 பேர் இப்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். 15 பேர் புதிதாகப் பட்டியலில் இணைந்துள்ளனர். மேலும், அவர்களில் 10 பேர் பெண்கள் ஆவர்.

மூன்றாவது இடம்
உலக பில்லியனர்களில் 114 பேர் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தனர். அதேநேரம் இந்தியாவுக்குள் புதிதாக யாரும் குடியேறவில்லை. 2022 உடன் ஒப்பிடுகையில் இந்திய பில்லியனர்களில் 41 பேர் ஒரு பில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர். அதிகபட்சமாகச் சீனாவில் இருந்து 178 பேர் ஒரு பில்லியனுக்கும் அதிக தொகையை இழந்துள்ளனர். சர்வதேச அளவில் அதிக பில்லியனர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய பில்லியனர்கள் ஹாங்காங் ஜிடிபிக்கு இணையாக 361 பில்லியன் சொத்தை சேர்த்துள்ளனர்.

எங்கே அதிகம்
நகரங்கள் படி பார்த்தால் மும்பையில் அதிகபட்சமாக 66 பில்லியனர்களும்.. டெல்லியில் 39 பில்லியனர்களும், பெங்களூரில் 21 பில்லியனர்களும் உள்ளனர். அதிகபட்சமாக ஹெல்த்கேர் துறையில் தான் இந்தியாவில் அதிக பில்லியனர்கள் உள்ளனர். நுகர்வோர் பொருட்கள், கெமிக்கல் துறைகளைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 27 பில்லியன் சொத்துடன், சீரம் தலைவர் சைரஸ் பூனவல்லா, உலகின் டாப் ஹெல்த்கேர் பணக்காரராக உள்ளார். அதேபோல ஏவியேஷன் துறையிலும் உலகின் பணக்காரராக இண்டிகோ நிறுவனர்கள் ராகேஷ் கங்வால் மற்றும் ராகுல் பாட்டியா உள்ளனர்.












Click it and Unblock the Notifications