முப்படைகளின் அடுத்த தலைமை தளபதி யார்?.. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை!
டெல்லி: நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் பயிற்சி மையம் அருகில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடியபடி மரத்தில் 2 முறை மோதி விழுந்து எரிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் உடல்கள் முற்றிலும் கருகி அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது. பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை குறித்து முடிவெடுக்கும் உயர்மட்ட அமைப்பான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு மாலையில் கூடியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறுகிய நேரமே இந்த கூட்டத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே சீனாவுடன் எல்லை பிரச்சினை இருக்கும் நிலையில் அடுத்த முப்படை தளபதி யார்? என்ற கேள்வி எழுந்தது.
இந்த கூட்டத்தில் அடுத்த முப்படை தளபதி குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. முப்படை தளபதி தேர்வு முடிவு செய்யட்டு விட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.












Click it and Unblock the Notifications