இது புதுசா இருக்கேப்பா! "எங்களுக்கு டாஸ்மாக் கடை வேணும்”.. ஊரே திரண்டு தருமபுரி கலெக்டரிடம் மனு!
தருமபுரி: டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் எனக் கோரி தருமபுரி மாவட்டத்தில் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். டாஸ்மாக் கடைக்கு 20 கி.மீ தூரம் செல்ல வேண்டி இருப்பதால் தங்கள் பகுதியிலேயே டாஸ்மாக் கடை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்துவதை பல இடங்களில் பார்த்திருக்கிறோம். பெண்கள் போராட்டம் நடத்தி, பல டாஸ்மாக் கடைகளை மூட வைத்துள்ளனர். குடிமகன்களின் நடமாட்டம் காரணமாக பெண்கள், குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியும், கோவில்கள், பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வைத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் நடத்தி மதுக்கடையை மூட வைத்தனர். அதே தருமபுரி மாவட்டத்தில் இன்று, பொதுமக்கள் டாஸ்மாக் கடை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே டாஸ்மாக் மதுபான கடை அமைக்கக்கோரி கிராம மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பென்னாகரம் அருகே உள்ள அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நலப்பரம்பட்டி, கெட்டூர், ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அருகில் மதுபான கடை இல்லாததால் 20 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் மதுக்கடை அதிக தொலைவில் உள்ளதால், உள்ளூரில் சந்து கடைகளில் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது. விவசாய வேலை செய்துவிட்டு வரும் எங்களுக்கு மதுபானம் வேண்டும் என்றும், அதற்கு டாஸ்மாக் கடை அவசியம் வேண்டும் எனவும், ஆதனூரில் முன்பு இருந்த மதுக்கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக விற்கப்படும் மதுபானத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதால், தாங்கள் உழைத்து சம்பாதித்த பணம் அதிகம் செலவழிந்து விடுவதாகவும், கள்ளச்சாராயம் உள்ளிட்ட பிற போதையை மக்கள் நாடாத வகையில் தங்கள் பகுதியிலேயே டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications