செம கேப்டன்ஷி.. சொல்லி அடித்த ரோகித் சர்மா, கிளிக்கான 2 முக்கிய முடிவு! மும்பை இந்தியன்ஸ் விஸ்வரூபம்
துபாய்: தொட்டதெல்லாம் தூள் பறக்குது.. என்று ரோகித் சர்மா ரசிகர்கள் பாடிக் கொண்டு ஹேப்பியாக உள்ளனர். காரணம் இல்லாமல் இல்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐபிஎல் தொடங்கியது முதல் கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல விளையாடி வருகிறது. அவர்களது பழைய ரிதம் காணாமல் போயிருந்தது. ஆனால் நேற்றைய ஆட்டம் அப்படியில்லை. வந்துட்டோம்னு சொல்லு.. திரும்பி வந்துட்டோம்னு சொல்லு என்பதை போல இருந்தது மும்பை ஆட்டம்.
அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட ராஜஸ்தான் அணியை 90 ரன்களில் மடக்கிப் போட்டதிலேயே பாதி வெற்றி கிடைத்துவிட்டது. 8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியபோது, மும்பை இந்தியன்ஸ் பேன்ஸ் காலரை தூக்கி விட்டுக் கொண்டனர்.

ரோகித் சர்மா எடுத்த ரிஸ்க்
இத்தனைக்கும் காரணம் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிதான். அவர் ரிஸ்க் எடுத்து மேற்கொண்ட சில முடிவுகள் மிகச்சிறந்த பலனை கையில் கொண்டு சேர்த்தன. அப்படி என்ன செய்தார் என்கிறீர்களா. நேற்றைய ஆட்டத்தில் அவர் டி காக்கை சேர்க்கவில்லை. அதற்கு பதிலாக இஷான் கிஷனை மீண்டும் கொண்டு வந்தார். அதேபோல ஜேம்ஸ் நீசம் பந்து வீச்சுக்கு பலம் சேர்க்க அழைத்து வரப்பட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் இருவரும்தான் நேற்று ஸ்டார் பெர்பார்மன்ஸ் கொடுத்த வீரர்களாகவும் மாறினார்கள்.
Recommended Video

இஷான் கிஷன் சூப்பர்
இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்தான் இஷான் கிஷன். கடந்த ஆண்டு ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்ததல்லவா, அப்போது 516 ரன்கள் குவித்தார் இஷான் கிஷன். ஆனால் இப்போது இரண்டாவது பாதி ஐபிஎல் ஆட்டம் எமிரேட்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, அவர் மோசமாக ஆடினார். 11, 14 மற்றும் 9 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. இந்த நிலையில்தான் ரோகித் சர்மாவும், அணி நிர்வாகமும் 2 போட்டிகள் அவருக்கு பிரேக் கொடுத்தனர். நேற்றைய ஆட்டத்தில் அதாவது வாழ்வா, சாவா ஆட்டத்தில் இஷானை நம்பி டீமுக்கு அழைத்து வந்தார் ரோகித் சர்மா. 25 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 50 ரன்கள் விளாசி அசத்தினார் இஷான் கிஷன். இத்தனைக்கும், பந்து வேகத்தில் மாறுபாடு காட்டிய சார்ஜா பிட்சில், சிறப்பாக பேட் செய்தார் இவர்.

ஜேம்ஸ் நீஷம்
இன்னொரு பக்கம் ஆர்.ஆர். பேட்டிங் முதுகெலும்பை உடைத்தவர் ரோகித் அழைத்து வந்த ஜேம்ஸ் நீஷம்தான். முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரோகித் வியூகம் பக்காவாக செயல்பட்டதால் மும்பை அணி பெரும் உற்சாகமடைந்துள்ளது. அதன் எழுச்சி ரசிகர்களை ஆரவாரப்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே நிலவரம்
அதேநேரம், நன்றாக ஆடிய சிஎஸ்கே கடந்த 2 போட்டிகளில் சொதப்பியுள்ளது. சிறப்பாக ஸ்லோ பவுலிங் வீசக்கூடிய, பிராவோவிற்கு வெறும் 2 ஓவர்தான் கொடுத்தார் தோனி. இது டெல்லி அணி வெற்றி பெற வாய்ப்பை ஏற்படுத்தியது. டெல்லி அணி கடந்த சீசனில் கடைசி நேரத்தில் வீழ்ச்சியடைய துவங்கியதை போல இந்த சீசனில் சிஎஸ்கே சரிவடையுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் சிஎஸ்கே ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications