மகாராஷ்டிராவை போல தமிழகத்தில் விவசாயிகள் எழுச்சி ஏற்படாதது ஏன்.. தடுப்பது யார்? தலையங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிராவில் பல லட்சம் விவசாயிகள் செங்கொடி ஏந்தி 200 கி.மீ நெடும் பயணத்தை நடந்தே மும்பைக்கு வந்து தங்களது கோரிக்கைகளை தேசத்துக்கு உரத்து சொல்லியிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சி கொடி ஏந்தியவர்களாயிற்றே என எந்த கட்சியும் ஒதுங்கிக் கொள்ளவில்லை.

ஏனெனில் அவர்கள் விவசாயிகள்... கடன் தள்ளுபடி, பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்குவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆகப் பெரும் தியாக வேள்வியைப் போல இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். கால் பாதங்கள் கொப்பளித்து வெடித்து சிதறி ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வந்த அந்த போராளிகளின் போர்க்குணம் போற்றுதலுக்குரியது.

One India Tamil Editorial on Maharashtra farmers protest

மகாராஷ்டிரா விவசாயிகள் எதிர்கொள்வதைவிட பல மடங்கு துயரத்தை தமிழக விவசாயிகள் அனுபவிக்கின்றனர். தமிழகத்துக்கான காவிரி நதிநீர் உரிமையை திட்டமிட்டு காவு கொண்டுவிட்டார்கள்.

சத்தீஸ்கர்- ஒடிஷா இடையே நதிநீர் பிரச்சனைக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடுவர் மன்றம் அமைக்கிறது மத்திய அரசு; ஆனால் தமிழக நதிநீர் பிரச்சனை என்றால் முதுகில் குத்தி பச்சைதுரோகத்தை பரிசாகத் தருகிறது மத்திய அரசு.

மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன் என விவசாயிகளை பலியெடுக்கும் அத்தனை திட்டங்களையும் தமிழ் மண்ணில் வலிந்து திணிக்கிறது மத்திய அரசு. தமிழகத்தின் விவசாயத்தை முற்றாக நாசமாக்கி வளத்தை சுரண்டி பாலைவனமாக்கவே துடியாய் துடிக்கிறது மத்திய அரசு.

வரலாறு காணாத வறட்சியால் கொத்து கொத்தாக விவசாயிகள் செத்து மடிந்தும் ஈவிரக்கமில்லாத அரசாகத்தான் மத்திய அரசு இருக்கிறது. கதிராமங்கலமும் நெடுவாசலும் போர்க்களங்களாக உருவெடுத்த போதும் இறுமாப்பு கலையாமல் இருக்கிறது மத்திய அரசு.

ஜல்லிக்கட்டுக்கு தமிழகம் திரண்டதைப் போல விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வு காண மாபெரும் ஒன்று கூடலும் பேரெழுச்சியும் தமிழகத்தில் அவசியம். மகாராஷ்டிராவில் விவசாயிகளின் பேரெழுச்சியை சாத்தியப்படுத்திய மார்க்சிஸ்ட் கட்சியால் தமிழகத்தில் ஏன் சாத்தியப்படுத்தாமல் போனது என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி.

தமிழக இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் பிரச்சனைகளைத் 'தேசிய' பார்வையோடுதான் அணுகுகிறார்கள். நாசகார திட்டங்களுக்கு எதிரான தமிழக இடதுசாரிகளின் குரல் சன்னமானதாகவே இருக்கிறது., சங்கநாதம் எழுப்ப வேண்டிய செங்கொடி தோழர்கள் தேசியத் தலைமைக்காக மண்ணுக்கு விரோத மக்கள் விரோத திட்டங்களுக்கு மறைமுகமாக முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.,

கூடங்குளம் அணு உலையாகட்டும், ஓஎன்ஜிசி விவகாரங்களாகட்டும்.. அனைத்திலும் இரட்டை நிலைப்பாடுதான். ஆக்கப்பூர்வமான எதிர்ப்பு எதுவும் இல்லை என்பதுதான் இடதுசாரிகள் மீதான குற்றச்சாட்டு. அடிப்படையில் மண்ணின் மைந்தர்களின் கட்சியான திராவிட கட்சிகள்தான் விவசாயிகள் பேரெழுச்சிக்கு வித்திட்டிருக்க வேண்டும். அவர்களும் இதைச் செய்யவில்லை.

எல்லா கட்சிகளும் பேச்சளவிலும் தீர்மான அளவிலும் விவசாயிகளுக்கு கரிசனம் காட்டுவதைப் போல அப்பட்டமாக நடிக்கிறார்கள் என்பது பொய் இல்லை. இதுதான் தமிழகத்தின் யதார்த்த அவலம்.

தமிழகத்தின் அனைத்து கட்சி விவசாய சங்கங்களும் ஓரணியில் திரள்வதை எது தடுக்கிறது? ஓட்டு கூட்டணிக்கு ஒன்று சேரும் உங்களால் சோறு போடும் விவசாயிகளுக்காக ஒன்று சேர முடியாமல் போகுமோ? மனம் இருந்தால் மார்க்கமுண்டு சோ கால்ட் 'மக்கள்' தலைவர்களே!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oneindia Tamil Editorial on Maharashtra farmers protest.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற