ஈரோடு கிழக்கு: அண்ணன் மறைவு..வேட்பாளராக அப்பா-தேர்தல் பிரசாரத்தை ஜரூராக தொடங்கிய சஞ்சய் சம்பத்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக அவரது மகன் சஞ்சய் சம்பத் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவின் இபிஎஸ் அணியும் தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கிவிட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா திடீரென காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலிலும் காங்கிரஸுக்கே தொகுதியை விட்டு கொடுத்தது திமுக. இதனால் திருமகன் ஈவெராவின் சகோதரர் சஞ்சய் சம்பத் போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் மேலிடமோ திருமகன் ஈவெராவின் தந்தை மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவித்தது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் மிகவும் பரபரப்பானது. சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டசபைக்குள் நுழைவதற்கான வியூகங்களுடன் ஈவிகே எஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார். முதல் கட்டமாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவை கோரினார் இளங்கோவன்.
அதேநேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே கை சின்னத்துக்கு வாக்கு கேட்டனர் திமுக அமைச்சர் நேரு, முத்துசாமி. திமுகவும் 11 அமைச்சர்களை உள்ளடக்கிய மெகா தேர்தல் பணிக்குழுவை அமைத்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் இருந்த போதும் அவரது மகன் சஞ்சய் சம்பத், தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கணிசமாக இருக்கும் வேட்டுவ கவுண்டர்களின் வாக்குகளை குறிவைக்க புதிய திராவிட கழகத்தின் ராஜ் கவுண்டர் உள்ளிட்டோருடன் பிரசாரம் செய்கிறார் சஞ்சய் சம்பத்.

இரட்டை இலை கிடைக்கும்; எப்படியும் வேட்பாளரை இபிஎஸ் அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் அதிமுகவினரும் தேர்தல் பணிகளில் முனைப்புடன் இறங்கி உள்ளனர். ஆனால் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவினர் இதுவரை அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கவில்லை. அதிமுகவை ஆதரிப்போம் என அறிவித்த தமாகா ஏற்கனவே 16 தலைவர்கள் கொண்ட ஒரு பணிக்குழுவை அமைத்தது. அத்துடன் மேலும் இளைஞர் அணியின் 23 பேர் கொண்ட பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் பரபரத்து கொண்டிருக்கிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! 16 எம்எல்ஏக்கள் உட்பட 62 பேர் கொண்ட டீமை வெயிட்டாக களமிறக்கிய காங்கிரஸ்!