தெலுங்கானா காங்கிரஸிலும் கலகம்.. கட்சித் தாவுகிறாரா எம்.எல்.ஏ? தயாராகும் பாஜக
ஹைதராபாத்: தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியில் சமீப நாட்களாக குழப்பங்கள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியின் தலைமைப் பாணி விவகாரத்தில் கட்சியின் மேலிடம் உடனடியாக தலையிட வேண்டும் என குரல்கள் மேலெழுந்துள்ளன. இந்த சர்ச்சை காரணமாக சில எம்.எல்.ஏக்கள். பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நிலைமை மோசமடைந்துள்ளது.
முனுகோடு தொகுதி எம்எல்ஏ கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி பாஜவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அம்மாநில காங்கிரஸில் கட்சியின் மேலிடம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜ் கோபால் கட்சியை விட்டு ஒருவேளை சென்றுவிட்டால் அவருடன் மற்ற எம்.எல்.ஏக்களும் செல்ல வாய்ப்பிருப்பதால் தற்போது அம்மாநில அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சித்தாவல்
காங்கிரஸ் கட்சியில் இருந்த சில முக்கிய தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாக கட்சியை விட்டு பாஜகவுக்கும் இதர கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இதன் காரணமாக சில மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. இது தற்போது தெலங்கானா வரை தொடர்ந்துள்ளது. தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் தலைவராக ரேவந்த் ரெட்டியின் கடந்த 2017ல் பொறுப்பேற்றிருந்தார். இவர் முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். இதனையடுத்து இவர் புதிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கையாண்ட கட்சிப்பணிகள் இதர தலைவர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல்
அடுத்த ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் தனது தொகுதியான நல்கொண்டா மாவட்டத்திற்கு செல்லவோ, பிரச்சாரம் செய்யவோ வேண்டாம் என்று ராஜ்கோபல் ரெட்டி ரேவந்த் ரெட்டியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் தானும் தனது சகோதரர் இந்த தொகுதிகளில் கட்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாக ராஜ்கோபல் கூறியுள்ளார். அவரது சகோதரர் வெங்கட் ரெட்டி அதே மாவட்டத்தில் உள்ள போங்கிர் தொகுதியின் எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.

முரண்பாடு
ராஜ்குமார் கூறியதற்கு ஓர் வலுவான காரணமும் உண்டு என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அதாவது, ரேவந்த் தலைமை பொறுப்புக்கு வந்ததிலிருந்து தன்னிச்சையாக செயல்படுவதாகவும், அவர் எடுக்கும் எந்த முடிவுகளுக்கு யாரிடமும் கலந்தாலோசிப்பதில்லை என்றும் கட்சியின் ஒரு சாரார் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல கட்சியின் மற்ற தலைவர்களைவிட இவர் எல்லா இடங்களிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறார் என்றும், இது ஏற்கெனவே கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மற்ற தலைவர்கள் இந்த முரணை எதிரொலிக்க தொடங்கியுள்ளதாகவும் கட்சியினர் சிலர் கூறி வருகின்றனர்.

உரசல்
ரேவந்த்தின் நடவடிக்கைகள் மற்ற எம்.எல்.ஏக்களிடம் உரசல்களை ஏற்படுத்திய நிலையில், சங்கரெட்டி மற்றும் ஜெயபிரகாஷ் என இரண்டு எம்.எல்.ஏக்கள் இது தொடர்பாக கட்சியின் மேலிடத்தை நாடியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மற்ற மூத்த தலைவர்களும் மேலிடத்தை நாடியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கட்சிக்குள்ளேயே ரேவந்துக்கு ஆதரவு இல்லாத நிலையில் கட்சி எப்படி மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று ஜெயபிரகாஷ் கட்சி தலைமையிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக கட்சியினர் சிலர் கூறுகின்றனர். இது குறித்து ரேவந்த் செய்தியாளர்களிடம், "ரேவந்த் மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றேன். இந்த விவகாரம் தொடர்பாக கட்சி மேலிடம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாவிடில் எதிர் வரும் தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்படாமல் போகலாம்" என்று கூறியிருந்தார்.

ஆதரவு
ரேவந்த்க்கு எதிராக ஒருதரப்பினர் இவ்வாறு விமர்சனங்களை எழுப்பினாலும் கட்சியின் முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பாட்டி விக்ரமார்கா மற்றும் சில முக்கிய தலைவர்கள் இந்த பிரச்னையில் தலையிடாமல் ஒதுங்கியுள்ளனர். அதேபோல ரேவந்த் கட்சி பணிகளில் அனைவரையும் ஒருங்கிணைக்க முயன்றதாகவும், தேர்தலில் வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் ஒரு சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எது எப்படியாயினும் கட்சி எதிர் வரும் தேர்தலை ஒன்றாக இருந்து சந்தித்து வெற்றிபெற வேண்டும் என்பதே கட்சி நலனில் அக்கறைகொண்டோரின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications