“பேரதிர்ச்சி”.. நேபாள விமான விபத்தில் சிக்கிய 5 இந்தியர்கள்! உயிர் பிழைப்பார்களா? தூதரகம் விளக்கம்
காத்மாண்டு: காத்மாண்டுவில் இருந்து போக்கரா சர்வதேச விமான நிலையம் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானதில் 45 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் பயணித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. ஆனால், அவர்களின் நிலை என்ன என்பது பற்றிய போதிய தகவல்கள் கிடைக்கவில்லை.
நேபாளத்தின் போக்கரா சர்வதேச விமான நிலையத்திற்கு தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள், 4 விமான பணியாளர்களுடன் எட்டி ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது.
போக்கரோ விமான நிலையத்துக்கு வந்தடைந்த அந்த பயணிகள் விமானம் தரையிறங்கும் சமயத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக அருகே ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளத்தாக்கில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

32 உடல்கள் மீட்பு
விமானம் விபத்துக்கு உள்ளானதை தொடர்ந்து அங்கிருந்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து உள்ளே இருந்த பயணிகள் மற்றும் விமான பணியாளர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. இதுவரை 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளத்தாக்கில் விழுந்த விமானம்
இதுகுறித்து நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி கூறுகையில், "விமான நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் செட்டி என்ற ஆற்றின் பள்ளத்தாக்கில் விமானம் விழுந்து விபத்து உள்ளானது. 200 ராணுவ வீரர்கள் 300க்கும் மேற்பட்ட ரேஞ்சர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்." என்றார்.

அடையாளம் காணப்படாத உடல்கள்
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 45 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. ஆனால், இதுவரை மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படாததால் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

நேரில் செல்லும் பிரசண்டா
விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட நேபாளம் பிரதமர் பிரசண்டா, விமானம் விபத்துக்குள்ளான பொக்கராவுக்கு விரைகிறார். அங்கு விபத்து நடந்த விமான நிலையத்திற்கு சென்று அவர் பார்வையிட இருக்கிறார். விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து போக்கரா விமான நிலையமும் மூடப்பட்டு உள்ளது.

ஏன் விபத்து?
இந்த விமான விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் நேபாளத்தில் அடர்ந்து பனி மூட்டம் நிலவியது விபத்துக்கு காரணமாக பார்க்கப்பட்டது. புகை மூட்டம் எழுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தவுடன் இதற்கான உண்மை காரணம் தெரியவரும்.

5 இந்தியர்கள்
இந்த நிலையில் விமானத்தில் சென்ற 68 பயணிகளில் 53 பேர் நேபாளம் நாட்டின் குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் 5 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், 4 பேர் ரஷிய குடிமக்கள் எனவும், 2 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் என்றும், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் தலா ஒருவர் இதில் பயணித்ததாக போக்கரா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள். குறிப்பாக இதில் 2 குழந்தைகளும் அடக்கம்.

மத்திய அமைச்சர் இரங்கல்
உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்படாத காரணத்தால் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ள இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, "நேபாள விமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் துரதிருஷ்டவசமானவை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் என்னுடைய பிரார்த்தனைகள் இருக்கும்." என்று பதிவிட்டு உள்ளார்.

இந்திய தூதரகம் விளக்கம்
இதுகுறித்து நேபாளத்திற்கான இந்திய தூதரகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நேபாளத்தில் விபத்தில் சிக்கிய விமானத்தில் 5 இந்தியர்கள் பயணித்து உள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்திய தூதரகம் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து நிலையை கண்காணித்து வருகிறது." என்று குறிப்பிட்டு 2 உதவி எண்களை அறிவித்து உள்ளது.

இந்திய தூதரக உதவி எண்கள்
1. காத்மாண்டு: ஸ்ரீ திவாகர் சர்மா:+977-9851107021
2. போகாரா: லெப்டினன்ட் கர்னல் ஷஷாங்க் திரிபாதி: +977-9856037699
தூதரகத்தின்
விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் நிலை குறித்து அறிந்துகொள்ளவும், கூடுதல் விபரங்களை தெரிவிக்கவும் இந்த எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications