நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

துபாய்: பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் - ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி.

கறுப்பு வெள்ளைக் காலத்தில், 4 வயதுச் சிறுமியாகத் தமிழ்க் கடவுள் முருகன் வேடத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக துணைவன் படத்தில் 1969 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
ஸ்ரீதேவிக்கு மீண்டும் பல படங்களில் முருகன் வேடம் கிடைத்தாலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் விதவிதமாகக் குழந்தை கதாபாத்திரங்கள் கிடைத்தன. அவற்றில் 1971-ல் பி.கே.பொற்றேகாட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான பூம்பட்டா என்ற படம், சிறுமி ஸ்ரீதேவியை பிறவிக் கலைஞராக அடையாளம் காட்டியது. அதில் சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளாகி மீளும் சாரதா என்ற சிறுமியாக முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை 8 வயதில் வென்றார்.
குழந்தை நட்சத்திரமாகப் புகழ்பெற்றுவிட்டாலும் குமரியானதும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற உந்துதல் சாவித்திரியைப் பார்த்தே உருவானது எனக் கூறும் ஸ்ரீதேவி, தனது 12 வயதில், சேதுமாதவன் இந்தியில் இயக்கிய ஜூலிபடத்தில் அறிமுகமாகி, கதாநாயகியின் தங்கையாக நடித்தார்.
இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தனது 'மூன்று முடிச்சு' படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகியாக அறிமுப்படுத்தினார். 16 வயதினிலே மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்துக்கொண்டது. , மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ஸ்ரீதேவி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அவர் கடைசியாக புலி தமிழ் படத்தில் நடித்தார். தனது கணவரின் தயாரிப்பில் மாம் என்ற திரைப்படத்தில் நடித்தார் ஸ்ரீதேவி.
திரைப்படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவி பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார் ஸ்ரீதேவி.
திருமணம் ஆனதும் பெண்கள் உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் கணவருக்காக, குழந்தைகளுக்காக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் என்று கூறிவார் ஸ்ரீதேவி.
தினசரி 1 மணிநேரம் ப்ளோர் உடற்பயிற்சி செய்பவர். அதில் முக்கியமானது 250 முறை ஸ்கிப்பிங் செய்வது. வாரத்தில் இருமுறை நீச்சல் பயிற்சி. பொரித்த உணவுகளை ஸ்ரீதேவி சாப்பிட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. உடம்பின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வார் ஸ்ரீதேவி. இளமையோடு திகழ்ந்த ஸ்ரீதேவி மாரடைப்பில் மரணமடைந்துள்ளது திரையுலகினரை மட்டுமல்லாது திரைப்பட ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கம், நடிகர், நடிகையர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!