இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக டெல்லி, ஸ்ரீநகரில் மாணவர்கள் தொடர் போராட்டம்!
டெல்லி: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் குண்டுகளை வீசி இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேலைக் கண்டித்து டெல்லி மற்றும் ஸ்ரீநகரில் மாணவர்கள் நேற்றும் போராட்டம் நடத்தினர்.
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். இதனைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தின் முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 54 மாணவ, மாணவிகளை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தின் முன்பாக நேற்று முன்தினம் சுமார் 80 மாணவர்கள் போராட்டம் நடத்தி கைதாகி இருந்தனர்.
ஸ்ரீநகரில்...
இதேபோல் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரிலும் மாணவர்கள் இஸ்ரேலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது இஸ்ரேலுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.