For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்களை தேர்வு செய்த பாஜக அரசு - 'மிஷன் சௌத் இந்தியா'வின் ஒரு பகுதியா?

By BBC News தமிழ்
|

தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா (கேரளா), பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் (ஆந்திர பிரதேசம்), கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர்.

BJP selects South Indians as nominated Rajya sabha members

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நால்வருக்கும் தன் ட்விட்டர் பக்கத்தில் தனித்தனியாக வாழ்த்துகளை பகிர்ந்திருந்தார். அவற்றில், நான்கு பேருடைய தனிச்சிறப்புகளை குறிப்பிட்ட மோதி, இளையராஜா குறித்த பதிவில், "எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர்" என குறிப்பிட்டிருந்தார்.

https://twitter.com/narendramodi/status/1544708652267106305

நியமன எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் நால்வரும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவர்களின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமா அல்லது அம்மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த அக்கட்சி கையிலெடுத்த உத்தியா என்ற கேள்வி பல்வேறு தரப்புகளிலிருந்தும் எழுந்துள்ளது. கர்நாடகா தவிர்த்த மற்ற 4 தென்னிந்திய மாநிலங்களில் பாஜக தன் இருப்பை விரிவுபடுத்தவும் ஆட்சியில் அமரவும் பல்வேறு உத்திகளை கையாண்டு வரும் நிலையில், தென்மாநில ஆளுமைகளை முன்னிறுத்துவது அதில் ஒரு பகுதியா என்றும் கேள்வி எழுகிறது.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஜூலை 2, 3 ஆகிய தேதிகளில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்த சில தினங்களில் நியமன எம்.பிக்கள் குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், இந்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தேசிய செயற்குழு கூட்டத்தில் ஜூலை 3 அன்று உரையாற்றிய பிரதமர் மோதி, தெலங்கானா மாநிலத்தை முன்னிறுத்தி பேசினார். மாநிலத்தின் வளர்ச்சியை குறிப்பிட்டு பேசிய அவர், "சப்கா சாத் சப்கா விகாஸ் (அனைவரும் இணைந்து அனைவருக்குமான முன்னேற்றம்) என்ற கொள்கை அடிப்படையில் தெலங்கானாவின் வளர்ச்சிக்காக பாஜக பணியாற்றுவதாக" குறிப்பிட்டார். மேலும், 'வாரிசு அரசியல்' குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். தென் மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்யும் மோதி, 'வாரிசு அரசியல்' விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்.

2023ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முன்கூட்டியே தேர்தல் வேலைகளைத் தொடங்கியுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

"பாஜகவின் திட்டம் தெளிவாக இருக்கிறது"

தேசிய செயற்குழு கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்தியது, 4 நியமன எம்.பிக்களை தென்மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுத்தது அனைத்தும், பாஜகவின் பரந்த உத்தியின் ஒரு பகுதியே என, மூத்த பத்திரிகையாளர் பல்லவி கோஷ் தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தன்னுடைய கணக்கை இன்னும் தொடங்காத, அமைப்பு ரீதியாக பலமில்லாத தென்மாநிலங்களில் கவனம் செலுத்துவதுதான் 2024-க்கான (நாடாளுமன்ற தேர்தலுக்கான) பாஜகவின் திட்டம் என்பது தெளிவாக இருக்கிறது. தற்போது பிரதமர் மோதியின் உத்தி எளிதானதாக இருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் 'தென்மாநிலங்களை நோக்கிச் செல்லுங்கள்" என்பதுதான் பிரதமர் மோதியின் குரலாக இருந்தது. அதனால் தான் அக்கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது.

தென்மாநிலங்கள் எப்போதும் பாஜகவுக்குக் கடினமானதாகவே இருந்திருக்கிறது. தென்னிந்திய மாநிலங்கள் பாஜகவுக்கு முக்கியம் என்பதையே இந்த நியமன எம்.பிக்களின் தேர்வு காட்டுகிறது. பிரதமர் மோதி தொடர்ச்சியாக தென்னிந்திய மாநிலங்களுக்குப் பயணம் செய்கிறார், திட்டங்களை தொடங்கிவைக்கிறார். 2024ஆம் ஆண்டுக்கான பாஜகவின் பரந்த உத்தியின் சமீபத்திய உதாரணம்தான் தென்மாநிலங்களிலிருந்து எம்.பிக்களை நியமித்தது" என்றார்.

"பிம்ப அரசியல் செய்கிறது பாஜக"

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், "தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருக்கிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருக்கின்றனர். பிறபடுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த மோதி பிரதமராக இருக்கிறார். இப்படி 'பிம்ப' அரசியலைத்தான் பாஜக செய்கிறது.

நியமன எம்.பிக்கள் தேர்வில் தென்மாநிலங்களுக்கு அளித்திருக்கும் முக்கியத்துவம், அடுத்தத் தேர்தலுக்கான வேலைகளை பாஜக இப்போதே தொடங்கிவிட்டதாகக் கருதலாம்" என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிக்கான பாஜக பொறுப்பாளராக, இந்திய நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

"2023 டிசம்பர் மாதத்தில் தெலங்கானாவில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், இப்போதே தொடர் வேலைகளை பாஜகவினர் ஆரம்பித்துவிட்டனர். தமிழ்நாட்டிலும் 4 மக்களவை தொகுதிகளுக்கு பொறுப்பாளராக வி.கே.சிங்கை நியமித்திருப்பதும் முன்கூட்டிய வேலையாகத்தான் இருக்கிறது" என்றார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

மேலும், "தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற அளவில்தான் இன்னும் அரசியல் விவாதம் தொடர்கிறது. ஆனால், அதிமுகவின் இடம் வெற்றிடமானால் அந்த இடத்திற்கு பாஜக வரும்" என்றார், அவர்.

தென்னிந்திய மாநிலங்களிலிருந்து நியமன எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது பாஜகவின் தேர்தல் உத்தியா என, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் அளித்த அவர், "பாஜகவின் எல்லா நடவடிக்கைகளிலும் ஏன் அர்த்தம் கற்பிக்கப்படுகிறது? தகுதியானவர்களுக்குத்தானே வழங்கப்படுகின்றது. உத்தியாக ஏன் பார்க்க வேண்டும்? நால்வருக்கும் கொடுக்கக்கூடாதா? திறமையின் அடிப்படையில் தான் வழங்கியிருக்கிறோம். பத்ம விருதுகளும் அவ்வாறே வழங்கப்படுகின்றது.

'பிம்ப' அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு இல்லை. நாட்டிலேயே பெரிய கட்சியாக பாஜக இருக்கிறது. திறமையானவர்களுக்கு தங்களால் தகுந்த அங்கீகாரம் வழங்க முடியவில்லை என்கிற ஆதங்கத்தில்தான் எதிர்க்கட்சிகள் பேசுகின்றன" என தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
BJP selects south indians as nominated Rajya sabha members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X