For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி அலையால் கர்நாடகாவில் மீண்டது பாஜக: பெங்களூர் அக்கட்சியின் கோட்டையானது

By Veera Kumar
|

பெங்களூர்: கர்நாடக மாநில பாஜக அரசு அடித்த கூத்துக்களால், சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போன அக்கட்சி, மோடி அலையால் நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது.

BJP travell on Modi wave to retain hold in Karnataka

காங்கிரஸ் ஆட்சி

எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவருக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்களே கலகம் செய்து ரெசார்ட்டுகளில் சென்று தங்கியிருந்தது, சொந்த கட்சி எம்.எல்.ஏக்களே நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவந்தது, ஊழல் குற்றச்சாட்டு, ஒரே ஆட்சியில் 3 முதல்வர்கள் மாறியது என கர்நாடகாவே அல்லோகலப்பட்டது பாஜக ஆட்சியில். வெறுத்துப்போன மக்கள் தேய்ந்து போய்க்கொண்டிருந்த காங்கிரசை தேடிக் கண்டுபிடித்து 123 சீட்டுகளுடன் அறுதி பெரும்பான்மை ஆட்சியை அளித்தனர்.

ஓராண்டில் மாற்றம்

சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 223 தொகுதிகளில் (ஒரு தொகுதிக்கு அப்போது தேர்தல் நடக்கவில்லை) 40 சீட்டுகளை மட்டுமே பெற்ற பாஜக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை மஜதவிடம் பறிகொடுத்தது. கடந்த மே மாதம்தான் இந்த மக்கள் புரட்சி கர்நாடகாவில் நடந்திருந்தது. ஆனால் இந்த மே மாதம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 17 தொகுதிகளை பாஜக சுருட்டிவிட்டது. நாட்டின், தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரின் மூன்று தொகுதிகளும் கடந்த தேர்தலை போலவே இம்முறையும் பாஜகவுக்குத்தான் போயுள்ளது.

இருந்தாலும் 2 கம்மிதான்..

அதே நேரம் கடந்த முறை மாநிலம் முழுவதிலும் பாஜக 19 தொகுதிகளை கைப்பற்றியிருந்த நிலையில், இப்போது இரு தொகுதிகளை காங்கிரசிடம் பறிகொடுத்துவிட்டு 17 தொகுதிகளை மட்டும் பிடித்துள்ளது. சட்டசபை தேர்தல் படுதோல்வியை ஒப்பிட்டால் இது மிகப்பெரிய வெற்றிதான். தென் இந்தியாவிலேயே முதன் முதலாக பாஜக அரசு அமைந்த கர்நாடகாவில் மீண்டும் அதன் ஆதிக்கம் தொடங்கியுள்ளது.

காங்கிரசுக்கு 9

அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து ஓராண்டே ஆன நிலையிலும், காங்கிரசால் கடந்த முறையைவிட மூன்று சீட்டுகள்தான் அதிகம் பெற முடிந்துள்ளது. கடந்த முறை 6 இந்த முறை 9 தொகுதிகள் அக்கட்சி வசமாகியுள்ளன. தேவகவுடா கட்சி 2 தொகுதிகளை கைப்பற்றி கடந்தமுறையைவிட ஒரு சீட்டை இழந்துள்ளது.

மோடி-எடியூரப்பா காம்போ

கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றிக்கு காரணம் மோடி அலைதான் என வெற்றி பெற்ற வேட்பாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். சித்தராமையா போன்ற மக்கள் செல்வாக்குள்ள முதல்வரை மீறி காங்கிரசைவிட அதிக தொகுதிகள் கிடைக்க, மோடி மீதான கர்நாடக மக்களின் நம்பிக்கைதான் காரணம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்து கடந்த சட்டசபை தேர்தலில் களம் கண்ட எடியூரப்பா இம்முறை பாஜகவில் இருப்பதும் கர்நாடகாவில் அக்கட்சிக்கு மக்கள் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளது. சித்தராமையாவுக்கு ஈடான மக்கள் ஆதரவுள்ள தலைவர் எடியூரப்பா மட்டுமே என்பது கர்நாடக நிதர்சனம்.

English summary
An upbeat BJP on Friday retained its hold in Karnataka, winning 17 Lok Sabha seats, riding on a popularity wave of its prime ministerial candidate Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X