
ராஜ்நாத் சிங் சென்ற நேரம்.. வெடித்து சிதறிய குண்டு! பயங்கரவாதி என்கவுண்டர் - காஷ்மீரில் பரபர
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற நேரத்தில் வெடிகுண்டு வெடித்ததுடன் பயங்கரவாதியை அம்மாநில காவல்துறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபூரா மாவட்டத்தில் உள்ள அலூசா என்ற பகுதியில் சக்தி குறைவான குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்று அம்மாநில போலீசார் தெரிவித்து உள்ளார்கள். குண்டு வெடிப்பு நடந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதுடன் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா தாக்குதல் நடத்தாது.. அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைத்தால் பதிலடிதான்..ராஜ்நாத்சிங் வார்னிங்

எண்கவுண்டர்
இது ஒருபுறம் இருக்க ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் என்கவுண்டர் சம்பவம் நடந்து உள்ளது. அந்த மாவட்டத்தின் கௌசர்நாக் அருகே உள்ள அஸ்தான் மார்க் பகுதியில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் பயங்கரவாதியை சுட்டுக் கொன்றதாக தெரிவித்து இருக்கின்றனர்.

ராஜ்நாத் சிங்
தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவதாகவும் அவர்கள் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ள நேரத்தில் நடந்து உள்ள இந்த 2 சம்பவங்களால் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர் பயணம்
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் காலாட்படை தின கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற இருக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ராணுவ தலைவர் மனோஜ் பாண்டேவுடன் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு இன்று வருகை தந்தார்.

காலாட்படை தினம்
ஸ்ரீநகரில் விமானப் படை தளத்தில் இருக்கும் 1947 ஆம் ஆண்டு போரின் வரலாற்று நிகழ்வுகள் குறித்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதனை தொடர்ந்து லடாக் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங், உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட உள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு
இதனை தொடர்ந்து நாளை கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றிலும் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். இந்த பயணத்தின்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் முப்படைகளின் தலைமை அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

ராஜ்நாத் சிங் ட்வீட்
இந்த பயணம் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு உள்ள ராஜ்நாத் சிங், "நாட்டின் 76 வது காலாட்படை தினத்தில், நமது துணிவுமிக்க காலாட்படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு என்னுடை அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் துணிவுமிக்க காலாட்படை தொழில்முறையோடு பணியாற்றக் கூடியது.

லடாக் பயணம்
இந்திய காலாட்படையின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் சேவைக்கும் நம் தேசம் தலை வணங்கும். அக்டோபர் 27 ஆம் தேதியான இன்று இந்திய ராணுவ ஏற்பாடு செய்து இருக்கும் சௌரிய திவாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்ரீநகருக்கு நான் செல்கிறேன். மறுநாள் லடாக்கிற்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறேன்." என்று பதிவிட்டு இருந்தார்.