
முழுசா ரத்து பன்னுங்க... இது நிரந்தர தீர்வு இல்ல! - அமித்ஷாவின் அறிவிப்புக்கு இரோம் ஷர்மிளா பதில்
இம்பால்: வட கிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முழுமையாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா வலியுறுத்தி இருக்கிறார்.
வட கிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அசாம், மணிப்பூரிலும் ஜம்மு காஷ்மீரிலும் ASFPA எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருந்து வருகிறது.
ராணுவத்தினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் வானளாவிய அதிகாரத்தை வழங்கும் இச்சட்டத்தால் பொதுமக்களைகூட பார்த்த இடத்தில் சுட்டுக் கொல்ல முடியும்.
''நான் பி-டீமும் இல்லை, பாஜக கூட கூட்டும் இல்லை'' - அமித்ஷாவின் பேச்சால் வெகுண்டெழுந்த மாயாவதி!

நாகாலாந்தில் 14 பொதுமக்கள் சுட்டுக்கொலை
நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய இச்சட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. கடந்த 2021 டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி நாகாலந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சில மாவட்டங்களில் ASFPA ரத்து
இதனை தொடர்ந்து ASFPA சட்டத்துக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்த மத்திய அரசு நாகாலாந்து, அசாம், மணிப்பூரின் சில மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்க முடிவு செய்து இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார்.

அடக்குமுறை சட்டம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அடக்குமுறை சட்டம் என்றார். "மக்களை கொல்லவும், வீடுகளை தாக்கவும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பலத்தால் மக்களை வெல்ல முடியாது. மக்களின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த சட்டம் தீர்வாக இருக்காது.

நிரந்தர தீர்வு அல்ல
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை சில பகுதிகளில் திரும்பப்பெறும் மத்திய அரசின் முடிவை வரவேற்கிறேன். இது நல்ல திசையை நோக்கி அழைத்துச் செல்லும் நேர்மறையான ஒரு முடிவு. ஆனால் இது நிரந்த தீர்வு அல்ல. இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்வதே முழு தீர்வை பெற்றுத் தரும்." என்றார்.

யார் இந்த இரோம் ஷர்மிளா?
கடந்த 2000 ஆம் ஆண்டு இம்பாலுக்கு அருகே மாலோம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் 10 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார்.