டெல்லியில் ஜூலை 15-ல் காவிரி நடுவர் மன்றக் கூட்டம்

காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டில் இறுதித் தீர்ப்பை அளித்தது. அதில், தமிழகத்துக்கு மொத்தம் 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீர் திறந்து விட வேண்டும். இதில் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி நீரை மாதாந்திர அடிப்படையில் கணக்கிட்டு ஒதுக்க வேண்டும். அந்த நீர் அளவில் புதுச்சேரிக்கு உரிய 7 டிஎம்சி நீரை தமிழகம் திறந்து விட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அத் தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளும் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும் முறையிட்டிருந்தன. கடந்த 7 ஆண்டுகளாக அந்த மனுக்கள் நிலுவையில் இருந்தன.
இந் நிலையில், நடுவர் மன்றத் தலைவராக இருந்த என்.பி. சிங், 2012-ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு நடுவர் மன்றத் தலைவர் பதவி காலியாக இருந்தது.
அண்மையில் நடுவர் மன்றத் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பி.எஸ். சவுஹானை மத்திய அரசு கடந்த மே மாதம் நியமித்தது. இதையடுத்து 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் டெல்லியில் ஜூலை 15-ஆம் தேதி கூடவுள்ளது.
இது தொடர்பாக காவிரி விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு மாநில அரசுகளுக்கும் நடுவர் மன்றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, டெல்லி ஜன்பத்தில் உள்ள ஜன்பத் பவனின் ஐந்தாவது தள மகாதயி நீர் விவகாரங்கள் தொடர்பான தீர்ப்பாய அலுவலகத்தில் ஜூலை 15-ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் காவிரி நடுவர் மன்றம் முன்பு வர உள்ளது.
இதனால் விசாரணைக்கு தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளின் பிரதிநிதிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.