For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முடிவெடுக்காமல் முடிந்த காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஊழலுக்கு எதிராக நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது தொடர்பாக நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டத்தில் எந்த முடிவுமே எடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் டெல்லியில் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுஷீல் குமார் ஷிண்டே, சிதம்பரம், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

sonia

உயர்நிலைக் குழுவில் இடம்பெறாத மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள நீதித் துறை பொறுப்புணர்வு மசோதா, ஊழல் பற்றிய தகவல் அளிப்போரை பாதுகாக்கும் மசோதா, குடிமக்கள் சாசனம் மசோதா, ஊழல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் வாய்ப்புகள் குறித்து இக் கூட்டத்தில் குறிப்பாக விவாதிக்கப்பட்டது.

அந்த மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்ட பிறகு அதன் அமலாக்கத்தை எவ்வளவு விரைவில் மேற்கொள்ள முடியும்? பிப்ரவரி இறுதியிலோ மார்ச் மாத தொடக்கத்திலோ மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டால் அதன் பிறகு புதிய சட்ட மசோதாக்களின் அமலாக்கத்தில் சிக்கல் ஏற்படுமா? என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மசோதாக்களில் சிலவற்றுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன. இந் நிலையில், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடர்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி கூட்டத்தொடராகும். அதில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிறகு தேர்தல் பிரசாரத்தை முறைப்படி தொடங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஊழலுக்கு எதிரான நிலுவை மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜகவின் ஆதரவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தேவைப்படும். ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில் அதற்கு பாஜக ஒத்துழைக்குமா என்பது குறித்தும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் விவாதித்தனர்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், எந்த முடிவும் எடுக்காமல் மீண்டும் கூடிப் பேசலாம் எனக் கூறி கூட்டத்தை சோனியா காந்தி நிறைவு செய்தார்.

இந்த உயர்நிலைக் குழு கூடும் முன்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். அப்போது சோனியா காந்தியும் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் சிலரை கட்சி பணிக்கு அனுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

English summary
The increasing footprint of Congress vice-president Rahul Gandhi on the outgoing UPA-II government of Prime Minister Manmohan Singh was evident yet again with the former meeting the latter just hours before the Congress core group meeting on Friday to push for the passage of a few anti-corruption bills in the coming session of Parliament, expected to begin early February.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X