For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ்: நிர்கதியாக்கப்பட்ட குடும்பங்கள் - தலைகீழ் மாற்றங்களை எதிர்கொள்ளும் இந்திய பெண்கள்

By BBC News தமிழ்
|

தருணா அரோரா, தன் கணவர் ராஜீவை இழந்துவிட்டார். ராஜீவ் தன் 50ஆவது பிறந்தநாளுக்கு இரு தினங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்தியாவை அச்சுறுத்திய கொரோனா இரண்டாவது அலையின் போது, ஏப்ரல் மாதம் ராஜீவ் வைரஸால் பாதிக்கப்பட்டார். போதிய மருத்துவ வசதிகள் இல்லை, மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்க்க போராடினர். அவர் இறந்து இரு வாரங்களுக்குப் பிறகு அரசாங்கத்தால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு மருத்துவமனையில் ஒரு படுக்கையைக் கண்டுபிடித்தனர்.

"ராஜீவின் மரணம் என்னை முடக்குவதாக உள்ளது. இவை என் வாழ்வின் மோசமான நாட்கள், அவர் மரணத்துக்குப் பின் என் வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டதால் எனக்கு வருத்தப்பட நேரமில்லை" என்கிறார் 46 வயதான தருணா.

தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றிய ராஜீவ் மட்டுமே குடும்பத்தில் பொருளீட்டுபவராக இருந்தார். அவரே பெரும்பாலான நிதிசார் முடிவுகளை எடுத்தார். இப்போது தருணா தன்கையில் உள்ள சேமிப்பை வைத்து சமாளிக்கிறார், அவருக்கு நிதி குறித்து இருக்கும் வரையறுக்கப்பட்ட அறிவை நம்பி இரு குழந்தைகளை வளர்க்கிறார்.

"நாங்கள் எப்போதும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்தோம், நான் கேட்டது எல்லாம் கிடைத்தது. அவர் தான் அனைத்து வரவு செலவுத் திட்டங்களையும் செய்தார், நான் அவரிடம் பணம் கேட்பேன். இப்போது எங்கள் சேமிப்பு இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று எனக்குத் தெரியாது, ஏனென்றால் இதுவரை நான் அவற்றை நிர்வகித்ததில்லை." என்கிறார் தருணா.

குழந்தைகளை ஆதரிக்க ஒரு வேலை கிடைக்கும் என்று அவர் நம்புகிறார், ஆனால் அவருக்கு பணி அனுபவம் இல்லை, எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. "நான் வேலை தேட வேண்டும், வீட்டை விட்டு வெளியேற வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும், ஒருவருடன் தேநீர் அருந்த வேண்டும். நான் வீட்டில் இருக்கும்போது, அந்த வலி என்னை தூங்க விடுவதில்லை." என்கிறார் தருணா.

ஊசி போடும் செவிலியர்
Getty Images
ஊசி போடும் செவிலியர்

உலகளவில் மிக மோசமான கொரோனா பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுவரை 4,40,000க்கும் அதிகமான அதிகாரப்பூர்வ மரணங்களை பதிவு செய்துள்ளது இந்தியா. இந்த பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான கைம்பெண்களை புதிதாக உருக்கியுள்ளது.

இவர்களில் பல பெண்கள் இதற்கு முன்பு சம்பளத்துக்கு வேலை செய்ததில்லை. உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் - (2019ஆம் ஆண்டு நிலவரப்படி) 21 சதவீதத்துக்கும் குறைவு, இது உலகின் மிகக் குறைவான பெண்கள் பங்கெடுப்பு விகிதங்களில் ஒன்று.

பலர் தங்கள் குடும்பங்களில் பொருளீட்டும் ஒரே நபரை இழந்துள்ளனர், அவர்களின் உலகம் ஒரே இரவில் தலைகீழாக மாறிவிட்டது. அவர்கள் இழப்பின் துக்கம் மற்றும் நிதி சிக்கல்கள் என இரட்டை சுமையை எதிர்கொள்ள போராடுகிறார்கள். வீட்டில் பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்கின்றனர், எனவே அவர்கள் நிதி சேவைகளிலிருந்து விலக்கப்படுகின்றனர்.

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய பெண்கள் ஆண்களை விட கிட்டத்தட்ட 13 சதவீதம் குறைவாக அவசர காலங்களில் நிதியைத் திரட்ட முடிகிறது என உலக வங்கி கூறுகிறது.

அதே போல, இந்திய ஆண்களை விட, பெண்கள் ஆறு சதவீதம் குறைவாகவே வங்கிக் கணக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் இந்தியப் பெண்கள் மொபைல் போன் வைத்திருக்கும் அல்லது இணையத்தைப் பயன்படுத்தும் எண்ணிக்கையும் ஆண்களைவிட கணிசமாகக் குறைவு.

சமீபத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் வழங்கவிருப்பதாக இந்திய அரசு அறிவித்தது. அது போன்ற நஷ்ட ஈடுகளைக் கூட, மேலே குறிபிட்ட சிக்கல்களால், தருணா போன்ற பெண்கள் பெறுவது சிரமமாகிறது.

இந்தியாவை புரட்டிப் போட்ட கொரோனா இரண்டாவது அலையின் போது, ​​மதுரா தாஸ்குப்தா சின்ஹா என்கிற மும்பையைச் சேர்ந்த ஒரு சமூக தொழில்முனைவோர், 50 வயதான பொறியாளர் மற்றும் தன் வகுப்பு தோழருக்காக, கொரோனா சிகிச்சை மற்றும் கவனிப்பு தேவைக்காக நிதி திரட்டிக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார், ஆனால் திரட்டிய நிதி, அவரது குடும்பத்துக்குச் சென்று சேர வேண்டும் என வகுப்புத் தோழர்கள் விரும்பினர்.

அத்தோழரின் மனைவியிடம், எந்த வங்கிக் கணக்குக்கு பணத்தை பரிமாற்றம் செய்வது என மதுரா கேட்ட போது, தனக்கு வங்கிக் கணக்கு இருக்கிறதா என்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.

"குடும்பத்தில் ஒரு துக்க நிகழ்வு ஏற்படும்போது, நிதி ரீதியில் என்ன செய்வது என குடும்பத்தில் எந்த அறிவும் இல்லை, அவருக்கு இணைய வங்கி அல்லது நிதிசார் விஷயங்களைக் கற்பிக்க இது சரியான நேரமல்ல" என்று முன்னாள் வங்கியாளரான மதுரா கூறுகிறார்.

இதைப் பார்த்த மதுரா, நாட் அலோன் என்கிற பிரச்சாரத்தைத் தொடங்கினார், கொரோனா தொற்றுநோயால் தங்கள் குடும்பத்தின் ஒரே பொருளீட்டுபவரை இழந்த பெண்களுக்கு உதவும் பிரச்சாரமிது.

இந்தியா மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உதவ விரும்புவதில் இருக்கும் ஒரு பெரிய எழுச்சியைக் கண்டார் மதுரா.

இச்சமூகத்தில் சுமார் 100 பெண்கள் உள்ளனர். பலர் தங்கள் மன ஆரோக்கியத்துடன் போராடி வருகின்றனர். மதுரா மற்றும் அவரது தன்னார்வலர்கள் குழு மனச்சோர்வு, உயிர் பிழைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் குற்ற உணர்வு மற்றும் தற்கொலைப் போக்குகளைக் கண்டனர். மற்றவர்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக சிரமப்படுகின்றனர்.

"இவர்களில் சில பெண்கள் சொத்துக்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மற்றவர்கள், திருமணமாகி வந்த வீட்டில் தங்க விடாதது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். சில நேரங்களில் இறந்தவர்களின் பணியிடம் தாராளமாக பண உதவி செய்கின்றனர், ஆனால் அவர்களோடு புதிய உறவினர்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றனர்." என்கிறார் மதுரா.

"பலர் தங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தைச் செலுத்த போராடுகிறார்கள். சிலருக்கு காப்பீடு எப்படி செயல்படுகிறது என்று கூட தெரியவில்லை, கணவர் இறந்த பிறகும் அவர் பிரீமியம் செலுத்தியுள்ளார்."

இதெற்கெல்லாம் மோசமான நிதி கல்வியறிவு தான் காரணம் என்கிறார். 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளவில் ஒப்பிடுகையில் 35% ஆண்கள் நிதி கல்வியறிவோடு இருப்பதாகவும், 30 சதவீத பெண்கள் மட்டுமே நிதி கல்வியறிவோடு இருப்பதாகவும் மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் (எஸ் & பி) கூறுகிறது.

இந்தியாவில், நிதி கல்வியறிவு குறைவாக உள்ளது மற்றும் பாலின இடைவெளி அதிகமாக உள்ளது, 27% ஆண்கள் நிதி கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர், பெண்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே நிதியறிவு கொண்டவர்களாக உள்ளனர்.

பெண்
Getty Images
பெண்

மதுரா மற்றும் அவரது குழுவினர் பெண்களை மீண்டும் பணியிடத்தில் நுழைய ஊக்குவிக்கிறார்கள், ஆனால் சிலர் இன்னும் தயாராக இல்லை. இதுபோன்ற சூழல்களில், துக்கத்திலிருந்து மீளும் ஆலோசனைகள் முன்னிலை பெறுகிறது, மேலும் அச்செயல்முறை வரிசைக்கிரமமாக நடப்பதில்லை.

தயாராக உள்ள பெண்கள் மெல்ல வேலைவாய்ப்பை நோக்கி அனுப்பப்படுகிறார்கள், தொழில் வழிகாட்டுதலும் ஆதரவும் அவர்களுக்கு

வழங்கப்படுகிறது. சில திட்டங்களில் ஆர்வமுள்ள பெண்களுக்கு, இந்த தன்னார்வலர்கள் அதை ஒரு சிறு வணிகமாக வளர்க்க உதவுகிறார்கள்.

இந்த சமூகத்தில் இருந்து வேலைக்கு அமர்த்த விரும்புவதாக கூறி சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மதுராவை அணுகியுள்ளன, 12 பெண்கள் ஏற்கனவே தங்கள் முதல் வேலைகளை கண்டுபிடித்துள்ளனர், இன்னும் பலர் வேலைகளில் சேர உள்ளனர்.

சரியான ஆதரவுடன், மதுராவின் வகுப்புத் தோழரின் மனைவி ஒரு வங்கிக் கணக்கைத் திறக்க முடிந்தது. அவரின் நலன் விரும்பிகளிடமிருந்து கொஞ்சம் நிதி உதவிகளைப் பெற்றார், ஆனால் நிலையான வருமான ஆதாரம் தேவைப்பட்டது. மதுராவும் அவருடைய குழுவும் அவருக்கு உதவ விரும்பினார்கள், ஆனால் அவருக்கு வேலை வழங்கப்பட்டாலும், அவர், தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறி மறுத்துவிட்டார். மதுரா பொறுமையாக காத்திருந்தார், இறுதியாக ஒரு நாள் அவர் மீண்டும் அழைத்தார்.

"அவர் இப்போது புத்திசாலித்தனமாக முதலீடு செய்கிறார், இணைய வங்கி சேவையைக் கற்றுக்கொண்டார், தன் மகளின் கல்விக்காக பணம் எடுப்பதை நிர்ணயித்திருக்கிறார். இவை அனைத்தும் மிகச் சிறிய விஷயங்கள், ஆனால் எங்களுக்கு அது மிகப்பெரிய வெற்றி."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
impact of Coronavirus among India, Coronavirus in India latest updates in tamil,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X