காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைகிறது - 24 மணிநேரத்தில் புயல் உருவாகும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாகை, தூத்துக்குடி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புவனேஷ்வர்: அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது 24 மணிநேரத்தில் புயலாக வலுவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. வெள்ளநீரில் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் 24 மணிநேரத்தில் புயலாக உருமாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு 'ஜாவத்' என்று பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும். புயலுக்கான பட்டியலில் இந்த பெயர் தான் இடம் பெற்றுள்ளது. ஜாவத் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். 'ஜாவத்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ந்தேதி ஒடிசாவிலும், டிசம்பர் 5ந்தேதி மேற்கு வங்காளத்திலும், அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் புயல் சார்ந்த சூழலை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பிரதமருக்கான முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், தேசிய பேரிடர் பொறுப்பு படையின் இயக்குனர் ஜெனரல் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜெனரல் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் புயலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்பு, தேசிய பேரிடர் பொறுப்பு படையின் இயக்குனர் ஜெனரல் அதுல் கார்வார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஜாவத் புயலை எதிர்கொள்வதற்காக தேவையான இடங்களில் 29 குழுக்கள் முன்பே குவிக்கப்பட்டு விட்டன. தற்போது மொத்தம் 33 குழுக்கள் குவிக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா கடற்கரை மார்க்கமாக செல்லும் 95 எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருதியே ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே மத்திய வங்கக் கடல், அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாளைய தினம் மதுரை, விருதுநகர் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
டிசம்பர் 5ஆம் தேதியன்று நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாகை, தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட பல துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications