For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரிகள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே அவர் மீது முதன் முதல்ல் ஊழல் புகார் சொன்னவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிதான். அன்றைய கவர்னர் சென்னா ரெட்டியைச் சந்தித்து தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, வாழப்பாடி ராமமூர்த்தி ஆகிய அனைவருமே மனு கொடுத்தார்கள். அதன் தொடர்ச்சிதான் இந்த வழக்கு! இந்த வழக்கின் சூத்திரதாரிகளாக பலர் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சுப்ரமணிய சுவாமி

ஜெயலலிதா முதன் முறையாக 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்துள்ளதாக ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, பிறகு 14.6.1996-ல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

Disproportionate assets case: Swamy to Cunha

லத்திகா சரண்

அந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையின் டி.ஐ.ஜியாக இருந்த லத்திகா சரணை விசாரணை செய்ய ஆணையிட்டார்.

வி.சி.பெருமாள்

அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு மனுத் தாக்கல் செய்தார்கள். அதையடுத்து சென்னை அமர்வு நீதிமன்றம் அந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால், இந்த வழக்கை துறைரீதியாக தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் ஐ.ஜி-யாக இருந்த வி.சி.பெருமாள் விசாரணை நடத்தி வந்தார்.

நல்லம்ம நாயுடு

வி.சி.பெருமாள் முதல் நிலை விசாரணையை முடித்து, குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான பூர்வாங்க ஆதாரங்கள் இருந்ததால், விரிவான விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும், விரிவான விசாரணை அதிகாரியாக நல்லம்ம நாயுடுவை நியமனம் செய்தும் 7-9-1996 அன்று உத்தரவிட்டார்.

அதன்படி 18-9-1996 அன்று முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தார். தொடர் விசாரணையை மேற்கொள்ள நல்லம்ம நாயுடுவுக்கு உதவியாக, 16 இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்யப்பட்டனர்.

நீதிமன்றம் ஒப்புதல்

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதோடு, அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். ஜெயலலிதா தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாங்கிய அசையா சொத்துக்களின் விவரங்களை நேரில் சென்று ஆய்வு செய்து தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக அமர்வு நீதிமன்றத்திடம் ஒப்புதலும் பெறப்பட்டது.

புழல் சிறையில் ஜெயலலிதா

இந்த நிலையில் டான்சி நில வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஜெயலலிதாவை 7.12.1996-ல் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அப்போது நல்லம நாயுடு தலைமையிலான ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் 7.12.96 முதல் 12.12.96 வரை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், ஹைதாராபாத் திராட்சை தோட்டம் ஆகிய இடங்களில் சோதனையிட்டார்.

ஏராளமான நகைகள், நகைகள்- பட்டு சேலைகளில் ஜொலித்த ஜெயலலிதா- சசிகலா புகைப்படங்கள், நூற்றுக்கணக்கான செருப்புகள், ஆயிரக்கணக்கான பட்டு சேலைகள் வெளியில் காட்டப்பட்டன.

259 சாட்சியங்கள்

அதன் பிறகு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அந்த தனி நீதிமன்றத்தில் 4.6.1997-ஆம் நாள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 21.10.1997-ல் ஜெயலலிதா, சசிகலா, சுகாதரன், இளவரசி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பிறகு 259 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

பல்டியடித்த சாட்சிகள்

மீண்டும் 2001-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வரானார். அதையடுத்து சாட்சிகள் மறு விசாரணை செய்யப்பட்டனர். அதில் பல சாட்சிகள் ஏற்கெனவே சொன்ன வாக்குமூலத்தை மாற்றி பிறழ் சாட்சியாக மாறினார்கள். இதனை அரசு வழக்கறிஞர் தடுக்கவில்லை.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்

இதையடுத்து தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில், 'வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், இந்த வழக்கை வேறு ஒரு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்'' என்று மனுத் தாக்கல் செய்தார். அதையடுத்து உச்ச நீதிமன்றம் வழக்கை பெங்களூருக்கு மாற்ற 18.11.2003-ல் உத்தரவிட்டது. 10.9.2004-ல் அதிகாரபூர்வமாக வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

அட்டாகாச ஆச்சார்யா

பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, துணை வழக்கறிஞர் சந்தேஷ் சௌட்டா ஆகியோர் ஆஜராயினர்.

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் இதுவரை வழக்கை இழுத்தடிக்க மட்டும் நூறு மனுக்களை பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்தை அவமதிக்கும் கிரிமினல் நடவடிக்கையாகும் இது, ஆகையால் சட்ட விதி 15(2)-ன் கீழ் ஜெயலலிதா, சசிகலா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு இந்த நீதிமன்றம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் வழக்கறிஞர் ஆச்சாரியா.

சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வரமுடியாதா?' என்று கேள்வி கேட்டு, ஜெயலலிதா தரப்பை திணறடித்தவர்.

வழக்கறிஞருக்கு எதிராக மனு

கர்நாடகா அரசின் அட்வகேட் ஜெனரலாக இருப்பவர், சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் இருக்கக்கூடாது என்று ஜெயலலிதா தரப்பு ஒரு பிரச்னையைக் கிளப்பியது. இதனையடுத்து உடனடியாக எனக்கு அரசின் அட்வகேட் ஜெனரல் பதவி தேவையில்லை என்று ராஜினாமா செய்துவிட்டு சொத்துக் குவிப்பு வழக்கில் கவனம் செலுத்தினார் ஆச்சார்யா.

விலகிய ஆச்சாரியா

ஆனால், ஜெயலலிதா தரப்பு இவரை இந்த வழக்கில் இருந்து நீக்குவதற்காக, கவர்னர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்குத் தொடர்ந்து அவதூறு மனுக்களை போட்டனர். இதுபோன்ற காரியங்களால் மன உளைச்சலுக்கு ஆளான ஆச்சாரியா, தன்னுடைய மீதி வாழ்நாளை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்புகிறேன் என்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஆகஸ்ட் 14, 2012 அன்று தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

மைக்கேல் டி.குன்ஹா

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 10 ஆண்டுகளாகப் பல நீதிபதிகளால் விசாரணை செய்தாலும் 31.10.2013-ல் வழக்கின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்ற ஜான் மைக்கேல் டி.குன்ஹா, தான் இன்றைய தினம் தீர்ப்பினை வாசிக்க இருக்கிறார்.

கூண்டில் நிற்கவைத்த நீதிபதி

26.5.2014-ம் தேதி நீதிமன்றத்துக்கு வந்திருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரையும் ஒருநாள் முழுக்க கூண்டில் நிற்க வைத்தார். இப்படி ஒவ்வொரு நாளும் கண்டிப்பு காட்டி தீர்ப்பின் தேதியை நோக்கியே வழக்கை நகர்த்திக்கொண்டு வந்தார்.

சு.சாமி டூ டி.குன்ஹா

கடந்த 28.8.2014-ம் தேதி ஒரே நாளில் ஜெயலலிதா தரப்பு, அரசு தரப்பு என இரு தரப்பு இறுதிவாதத்தின் நிறைவுத் தொகுப்பு வாதத்தை முடித்து எழுத்துபூர்வமான வாதத்தையும் பெற்ற அவர், 18 வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதியை அறிவித்தார் மைக்கேல் டி.குன்ஹா.

சுப்ரமணிய சுவாமி சென்னையில் தொடங்கிய வழக்கினை பெங்களூருவில் முடித்து வைத்தார் மைக்கேல் டி.குன்ஹா

English summary
The Rs 66.65 crore assets case dates back to Jayalalithaa's first term as the Chief Minister, from 1991 to 1996. It was filed before a special court in Chennai in 1996 by the Tamil Nadu's Department of Vigilance and Anti Corruption (DVAC). In perhaps one of the longest legal battles involving a political leader ever since the case was filed, the country has witnessed five Lok Sabha elections and Tamil Nadu three Assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X