வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்.... ஹை அலர்ட்டில் ஒடிசா! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை
புவனேஸ்வர்: தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்று மே 10ல் ஆந்திரா-ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் கோடைக்கால புயல் அதிக சேதத்ததை ஏற்படுத்துவதால் ஒடிசாவில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Recommended Video

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்றுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வலுவடைந்து நாளை மாலைக்குள் வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இடியுடன் மழை
அதாவது நாளை உருவாவதாக கணிக்கப்பட்டுள்ள புயல் அடுத்தவாரம் செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமைக்குள் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்ப்படுகிறது. இதையொட்டி காங்கேடிக் மண்டல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மே 10ல் கரையை கடக்க வாய்ப்பு
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், ‛‛குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு-மத்திய வங்கக்கடலில் வலுப்பெற்று புயலாக மே 10ல் கரையை கடக்கலாம். இருப்பினும் எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பது குறித்து இன்னும் கணிக்கவில்லை. புயல் காரணமாக காற்றின் வேகம் கடலில் மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் இருக்கும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்'' என்றார்.

எந்த இடத்தில் கரையை கடக்கும்?
இருப்பினும் இந்த புயல் ஆந்திரா- ஒடிசா இடையே அடுத்தவாரம் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒடிசாவில் பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கோடைக்காலத்தில் உருவான புயல்களான 2019ல் பானி, 2020ல் ஆம்பன், 2021ல் யாஸ் ஆகியவற்றால் கடும் சேதங்கள் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்பு படைகள் தயார்
ஒடிசா சிறப்பு நிவாரண கமிஷனர் (எஸ்ஆர்சி) பிகே ஜெனா கூறுகையில், "என்டிஆர்எப் (தேசிய பேரிடர் மீட்புப் படை) 17 குழுக்கள், ஓடிஆர்எப் (ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கை படை) 20 குழுக்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் 175 குழுக்கள் தயாராக இருக்கும்படி கேட்டுள்ளோம். மேலும் அவசர நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்கவும் 10 குழுக்களை தயாராக இருக்கும்படி தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம் கூறியுள்ளோம். மீனவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க இந்திய விமானப்படை மற்றும் கடற்படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.'' என்றார்.

விடுமுறைகள் ரத்து
இந்த எச்சரிக்கையால் மாநிலத்தில் தீயணைப்புத் துறை அதிகாரிகளின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.கே.உபாதயா தெரிவித்துள்ளார். மேலும் ஒடிசாவில் உள்ள 18 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் புயலால் மின்சக்தி மற்றும் தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications