For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனைத்து எக்சிட் போல்களிலும் 'பெயிலான' ஆம் ஆத்மி: பின்னணி...

By Veera Kumar
|

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்திக்க உள்ளதாக அனைத்து எக்சிட் போல் முடிவுகளும் கூறுகின்றன. அந்த கட்சியின் கோட்டையான டெல்லியிலும் கூட பாஜக வெற்றி வாகை சூடப்போவதாக கருத்துக் கணிப்புகளின் முடிவில் தெரியவந்துள்ளது.

ஹீரோவான கேஜ்ரிவால்

ஹீரோவான கேஜ்ரிவால்

அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிராக போராட்ட குழுவில் இருந்து பிரிந்து வந்த அரவிந்த் கேஜ்ரிவாலால் ஓராண்டுக்கு முன்பு துவங்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி. சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் குறுகிய காலத்தில் ஹீரோ அந்தஸ்துக்கு முன்னேறினார்.

டெல்லியில் அதிரடி

டெல்லியில் அதிரடி

டெல்லி சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் 28 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சியளித்தது ஆம் ஆத்மி . ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது இருந்த மக்களின் கோபத்தை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்யலாம் என்று நினைத்த பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. குறுகிய காலத்தில் ஒரு கட்சி பெற்ற அசுர வளர்ச்சியாக இதை ஊடகங்கள் வர்ணித்தன.

பாஜக திட்டம்

பாஜக திட்டம்

இதையடுத்து குதிரைபேரம் பேசி ஆட்சியமைக்கப்போவதில்லை என்று நல்ல பிள்ளையாக பாஜக ஒதுங்கிக்கொண்டது. ஆம் ஆத்மியை ஆட்சியமைக்கவிட்டு அவர்கள் உறுதியளித்தபடி ஆட்சியை நடத்தமுடியாமல் திணறுவதால் ஏற்படும் அதிருப்தியை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியை முற்றிலுமாக கைப்பற்றலாம் என்பது பாஜகவின் திட்டமாக இருந்தது.

ஆசை யாரைவிட்டது

ஆசை யாரைவிட்டது

பாஜகவின் அணுகுமுறை புரிந்திருந்தாலும், ஆட்சியமைக்க அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆசை. எந்த காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்து 28 தொகுதிகளை வென்றாரோ, அதே காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.

கேஜ்ரிவால் திணறல்

கேஜ்ரிவால் திணறல்

ஆட்சியமைத்த பிறகு கூறிய வாக்குறுதிகளை அரவிந்த் கேஜ்ரிவால் நிறைவேற்ற முடியாமல் திணறினார். டெல்லி மக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற விடாமல் குடிநீர் வாரிய அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டனர். மின்சார கட்டணத்தை குறைக்க முற்பட்டால், நஷ்டத்தில் இயங்குவதை காரணம் காண்பித்து மின்வெட்டை அமல்படுத்தியது மின்சார வாரியம். ஆட்சியை பற்றிய அனுபவம் இல்லாத கேஜ்ரிவால் விழிபிதுங்கி நின்றார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்..?

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்..?

இதைத்தான் பாஜகவும் எதிர்பார்த்தது, மறைமுகமாக காங்கிரசும் இதையே எதிர்பார்த்தது. அக்கட்சிகள் ஆசைப்பட்டபடியே ஆம் ஆத்மி நாளுக்குநாள் மக்களின் கோபத்தை சம்பாதித்துக்கொண்டே சென்றது. ஆடம்பரம் வேண்டாம் என்று கூறிய அரவிந்த் கேஜ்ரிவால், அரசு பங்களா கேட்டு அடம்பிடிப்பதாக வந்த செய்திகளும் மக்களின் கோபத்தை அதிகமாக்கியது.

ஆட்சி கவிழ்ந்தது

ஆட்சி கவிழ்ந்தது

ஒரு கட்டத்தில் இதற்குமேலும் ஆட்சியில் தொடர்ந்தால் மக்கள் மத்தியில் நாம் கட்டி வைத்துள்ள மனக்கோட்டை தூள் தூளாகிவிடும் என்று நினைத்த அரவிந்த் கேஜ்ரிவால், ஜனலோக்பால் சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்ற காங்கிரசும், பாஜகவும் எதிர்ப்பதாக குற்றம்சாட்டி முதல்வர் பதவிக்கு ராஜினாமா கடிதம் அளித்தார். ஆட்சிக்கு வந்த 49வது நாளிலேயே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைவிட்டு விலகியது.

எதிர்மறை பிரச்சாரம்

எதிர்மறை பிரச்சாரம்

ஆம் ஆத்மி கட்சி கவிழ்ந்ததும், நிர்வாக திறமை இல்லாமல் கேஜ்ரிவால் பயந்து ஓடிவிட்டார் என்ற பிரச்சாரம் பாஜக மற்றும் காங்கிரசால் முன்னெடுக்கப்பட்டது. இந்த விமர்சனத்தை சரியாக எதிர்கொள்வதில் ஆம் ஆத்மி தோல்வியடைந்துவிட்டது.

டெல்லி, உ.பி. அவுட்

டெல்லி, உ.பி. அவுட்

எக்சிட் போல் கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மியின் கோட்டையான டெல்லியில் 7 தொகுதிகளும் பாஜகவுக்கு செல்லும் என்று நியூஸ் எக்ஸ் கூறுகிறது. 6 தொகுதிகள் பாஜகவுக்கும், ஒரு தொகுதி காங்கிரசுக்கும் செல்லலாம் என்கிறது டைம்ஸ் நவ். பிற கருத்துக் கணிப்புகளும் அவ்வாறே கூறுகின்றன. உத்தர பிரதேசத்தில் மோடியை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிட்டார். அந்த தொகுதி உட்பட எந்த தொகுதியிலும் ஆம் ஆத்மி வெல்லாது என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன.

400க்கு நாலு

400க்கு நாலு

பஞ்சாப், சண்டீகர் போன்ற ஒரு சில மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளைத்தான் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஆரூடம் கூறுகின்றன. போட்டியிட்ட 400 தொகுதிகளில் 100 தொகுதியையாவது கைப்பற்றுவோம் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு, 4 முதல் 7 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று கூறும் கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

English summary
According to the exit polls, AAP is slated to win just 1 seat in Maharashtra 3 in Punjab and probably 2 in the other states. This would come as a massive blow for the young party, which has been claiming it would win over a 100 seats during this Lok Sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X