பரீட்சை எழுதும்போது திடீரென பறந்து விழுந்த ஃபேன்.. காயமடைந்த மாணவி.. தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி!
அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவியின் மீது திடீரென மின்விசிறி கழன்று விழுந்தது. இச்சம்பவத்தில் அந்த மாணவி காயமடைந்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அப்பள்ளியின் ஒரு தேர்வு அறையில் திடீரென மின்விசிறி ஒன்று கழன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரின் மீது விழுந்தது.

இதில் அந்த மாணவியின் கண்ணுக்குக் கீழ் மின்விசிறியின் இறக்கை கீறியுள்ளது. இதையடுத்து அந்த மாணவி உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனால் அந்த அறையில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதிசெய்த பிறகு தொடர்ந்து அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
தேர்வு முடிவடைந்த பிறகு, அந்த மாணவிக்கு மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவி நலமாக உள்ளாதாக அப்பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய பள்ளி முதல்வர், தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும், ஒவ்வொரு வகுப்பறையிலும் மின்விசிறிகள் சரியாக உள்ளதா என ஆய்வு நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வாரத்தில் ஆந்திர மாநிலம் கர்னூல் கோனேகண்ட்லாவில் உள்ள மண்டல் பரிஷத் உருது பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் ஒரு இறக்கை கழன்று விழுந்தது. இதில் இரு மாணவர்கள் காயமடைந்தனர்.
ஆந்திராவில் அடுத்தடுத்து, பள்ளிகளில் மின்விசிறிகள் கழன்று விழுந்து மாணவர்கள் காயமடையும் சம்பவங்கள் நடைபெற்று வருவது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications