பிளாஸ்டிக் பாட்டிலை ஒழித்தால் காசு.. வதோரா ரயில்வே ஸ்டேசனில் புதிய இயந்திரம் அறிமுகம்
வதோரா: பழைய பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொடுத்தால் அதன் எடைக்கு ஏற்ப பணத்தைத் தரும் புதிய இயந்திரம் வதோரா ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மண்ணிற்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒருகட்டமாக குஜராத் மாநிலம் வதோராவில் உள்ள ரயில் நிலையத்தில் பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை ஒழிக்க புதிய இயந்திரம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரமானது, பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே போட்டால், அவற்றை சுக்கு நூறாக உடைத்து தரும்.
தங்களால் இயன்ற அளவு, பொதுமக்களும் இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை போடலாம். அதன் எடைக்குத் தகுந்தவாறு பணம் தரப்படும்.
அதாவது, பிளாஸ்டிக் பாட்டில்களை அந்த இயந்திரத்தில் போட்டவர்கள், தங்களது மொபைல் எண்ணை அதில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஒரு பாட்டிலுக்கு ரூ. 5 என்ற கணக்கில் அவர்களுக்குரிய பணம், பேடிஎம் (Paytm) மூலம் வரவு வைக்கப்படும்.
உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் தேதி இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்திற்கு வதோரா ரயில் நிலையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!