இந்திராவின் இந்தியா ‍- 1

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று அன்னை இந்திராவின நினைவுநாள். அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம். அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம்.

உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியப் பெண்களை பட்டியலிடும். ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியப் பெண்ணை மட்டும்தான் சொல்லும். அவர்தான் இந்திரா காந்தி.

இந்தியாவில் அவருக்கு முன்னும் பிரதமர்கள் இருந்தார்கள், இன்னும் வருவார்கள் ஆனால் அழிக்க முடியாத முத்திரை பத்தித்தவர் அவர் ஒருவர்தான்.

Indira Gandhi's India -1

மோதிலால், ஜவர்லால், மவுண்பேட்டன், காந்தி, பட்டேல், விஜயலட்சுமி பண்டிட் என சுற்றிச் சுற்றி பெரும் அரசியல் ஜாம்பபான்களுடன் வளர்ந்தவர். அரசியல் காற்றைத்தான் அவர் சுவாசித்தார், அரசியலை பார்த்தபடியேதான் வளர்ந்தார்.

சீனாவின் துரோகம் நேருவிற்கு தாங்கமுடியாத வலி, அந்த சோகத்திலே இறந்தும் போனார். அதன் பின் வந்த இந்திரா பக்கத்து நாடுகளின் விஷயங்களை எல்லாம் அதிரடியாக கையாண்டதற்கு முதல்காரணம் துரோகி மாவோவும், ஏமாந்த நேருவும்.

இந்திரா இந்தியாவை ஆட்சி செய்த விதம் அனைவரும் அறிந்தது. அதனை மறுபடி விளக்கி சொன்னால், இதோ பாய்விரித்து படுத்துவிட்ட காங்கிரசை எழுப்பிவிட ஒருவன் வந்துவிட்டான் என அரசியலாக்குவார்கள், நமக்கு அவரின் அரசியல் வேண்டாம்.

Indira Gandhi's India -1

இந்திராவின் பெரும் சாதனையான இந்திய உளவுதுறை வெற்றிகளைப் பார்ப்போம்.

இந்திய உளவுதுறை 'ரா' அவர் காலத்தில்தான் தொடங்கபட்டது, அதுவரை இந்திய உளவு அமைப்பு இந்தியாவிற்குள் மட்டும் உளவு பார்க்கும் (தமிழக உளவுதுறை போல). இந்திரா காலத்தில்தான் வெளிநாட்டு உளவு பார்க்கும் அமைப்பு கே.என்.காவ் தலமையில் தொடங்கப்பட்டது. அதன் பிராதான பாத்திரம் பி.ராமன் (இந்த தமிழர்தான் இந்திய உளவுதுறையின் பிராதான மூளை).

சில உணர்வாளர்கள் உண்டு, ஒரு நாள் நரசிம்ம'ராவ்' படத்தினை கடுமையாக திட்டிகொண்டிருந்தார்கள், விசாரித்ததில் ஈழகுழப்பத்திற்கு 'ராவ்'வின் நடவடிக்கை காரணம் என எங்கோ படித்தார்களாம், அவர்கள் கண்ட 'ரா' அப்படி.

சீனா இந்திராவின் முதல் எதிரி. காலம் மாறியது சோவியத் மாவோ தகராறில் மாவோ தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதையும் மறந்து அமெரிக்க பக்கம் சாய, இந்திரா ரஷ்ய பக்கம் சேர்ந்து அட்டகாசமான ஆட்டம் ஆரம்பித்தார்.

Indira Gandhi's India -1

இந்திராவும் அமெரிக்க அதிபர் நிக்சனும் நடத்திய பனிப்போர் பிரமாதமானது. இனி ஒரு இந்தியப் பிரதமர் அப்படி சவால்விட‌ முடியுமா என்றால் அது சந்தேகம். நிக்சனே வாய்விட்டு சொன்னார், 'இந்திரா ஒரு அரசியல் சூனியக்காரி.'

இந்திய உளவுதுறையின் பெரும் சாதனைகளில் ஒன்று வங்கப் போர். ஒரு பாகிஸ்தான் எல்லையே எந்நாளும் தொல்லை, இதில் கிழக்கில் ஒரு பாகிஸ்தான் என்றால் தாங்குமா? அவர்களுக்குள் பிணக்கு எழுந்தநேரம் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவின் செல்லப் பிள்ளையானார். குழப்பம் தலைதூக்க வைத்து இந்தியா ராணுவ நடவடிக்கை வரை வந்து, என்றும் பாகிஸ்தான் மறக்காதவாறு மரண அடிகொடுத்தது, பின்னணியில் இருந்தது ரா. ராவின் அறிக்கைபெறும் தலைவர் பிரதமர் இந்திரா காந்தி.

இந்திராவின் திறமையான ரா, மற்றும் அதிரடி ராணுவம் கொடுத்த அடியில்தான், பாகிஸ்தானுக்கும் அந்த வெட்டுத் தழும்பு, தினம் கண்ணாடி பார்த்து தடவி தடவி அழுகிறது அது.
அதோடு விட்டாரா பூட்டோவை கிட்டதட்ட மனோகரா சிவாஜி போல இழுத்து வந்து சிம்லா உடன்படிக்கை எனும் பாகிஸ்தான் தோல்வி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பெருமை அவருக்கே சேரும்.

Indira Gandhi's India -1

பின்னர் எல்லையில் போக்கு காட்டிய சிக்கிம் மன்னரை மிரட்டி இந்தியாவோடு சிக்கிமை இணைத்ததில் ராவும் இந்திராவும் மகத்தான வெற்றி பெற்றார்கள்.

உச்சகட்டமாக நிக்சனின் எதிர்ப்பையும் மீறி, இந்தியாவில் 'புத்தர் சிரித்தார்'. அந்த அணுகுண்டு சோதனைக்கு ஏன் அந்தபெயர்? திபெத்தில் புத்தரை அழவைத்தார்கள் அல்லவா? சப்பை மூக்கர்கள், அந்த புத்தர் இந்தியாவின் அணுவலிமை கண்டு சிரித்தார் (காரணம் இல்லாமல் இந்தியா எந்தபெயரும் வைக்காது).

பின்னர் இந்திராவின் வரிசையில் பர்மா, மாலத்தீவு நாடுகளும் சேர்ந்தன. அல்லது நாங்கள் சமத்துபிள்ளை என ஓடிவந்து காலில் விழுந்தன. கிட்டதட்ட இந்திய துணைக் கண்டம் அதிகார உச்சம் பெற்றது.

Indira Gandhi's India -1

இந்திய வலிமைய தாங்கமுடியாத நிக்சன் அரசாங்கம், பொருளாதார தடை எனும் இன்றைய அநியாயத்தை அன்று ரூபாய் மதிப்பு இறக்கம் என மறைமுகமாக பழிவாங்கிற்று. அதில் விழ ஆரம்பித்ததுதான் ரூபாயின் மகா சரிவு.

அதனையும் சமாளித்தார் இந்திரா. தெற்கில் பெரும் ராஜதந்திரியான ஜெயவர்த்தனே. பாகிஸ்தான் வாழ்க, அமெரிக்க நிலைக்க என கோஷம் போட்டபொழுது ஈழப் பிரச்சினையில் தலையிட்டு அவரைக் கதறவைத்த வரலாறுகளும் உண்டு.

ஈழ தலைவர் அமிதலிங்கத்தை அழைத்து ஒரு குடியரசு விழாவில் தனதருகே அமரவைத்த அந்த‌ ராஜதந்திரம் ஒன்று போதும், எழுந்து நின்று கைதட்டலாம்.

இந்திய உளவுதுறைக்கு இரு பெரும் அவமானங்கள் உண்டு. ஒன்று கனிஷ்கா விமான வெடிப்பை தடுக்க முடியாமல் போனது. இன்னொன்று ஈழப் பிரச்சினைய குழப்போ குழப்பு என குழப்பி தள்ளியது. ஆனால் இரண்டும் இந்திரா காலத்திற்குப் பிந்தியவை.

இந்திராவின் காலத்தில்தான் 'ரா' பெரும் நடவடிக்கைகளில் வெற்றிமேல் வெற்றிபெற்றது, அங்குதான் இந்திராவின் வலிமையும், அவரின் ஆளுமையும் தெரிகிறது.

இவ்வாறாக சர்வதேசத்தில் உயரப் பறந்த இந்திரா உள்நாட்டு மக்களால் கொல்லபடும் நிலைக்கு எப்படி தள்ளப்பட்டார் என்பதுதான் சோகமான வரலாறு.

அதனை ஒரு இந்தியராக எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டியது.

-ஸ்டான்லி ராஜன்

(வருவார்..)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A special article mini series on late legendary Prime Minister Indira Gandhi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற