''பேராசைக்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்'': ஜெ. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பில் சுட்டி காட்டிய குன்ஹா
பெங்களூர்: உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தவறு செய்யும்போது, அதில் காட்டப்படும் சலுகை, ஒரு சமூகத்துக்குச் செய்யும் கேடாக முடியும் என்று ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில், நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா 1,136 பக்கங்களுக்கு எழுதியுள்ளார். முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.
தீர்ப்பின் விவரம் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. இதில் முக்கிய அம்சங்களை பார்ப்போம்.
ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவருடைய வருமானம் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் செய்த செலவுகள் 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய். இதுபற்றி மிக நியாயமான சந்தேகங்களை வழக்கின் புகார்தாரரான அரசுத் தரப்பினர் எழுப்பி உள்ளனர். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அசையாச் சொத்துகளின் மதிப்பு 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஆவணம் இல்லை
இந்த அசையாச் சொத்துகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரின் கணக்குகளில் வருகின்றன. ஆனால், அவை எந்த வழியில் வந்தன என்பதற்குக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுபற்றி அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடியவில்லை.

தகுதியை வைத்து எடை போடக்கூடாது
இந்த நீதிமன்றம், 'நிரஞ்சன் ஹேமச்சல் Vs மகாராஷ்டிரா அரசு' என்ற வழக்கின் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்துகிறது. அந்தத் தீர்ப்பில், 'ஊழலையும் அதன் தாக்கத்தையும் எடைபோடும்போது, குற்றம் செய்தவரின் தகுதியை வைத்து அதை எடை போடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி. தொலைநோக்குத் திட்டம் என தேசத்தின் முன்னேற்றத்துக்கான அனைத்து அம்சங்களையும் சிதைத்து தேசத்தைப் பாழாக்கும். பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்துக் குழி தோண்டிப் புதைத்துவிடும்' என்று உச்ச நீதிமன்றம் நிரஞ்சன் ஹேமச்சல் வழக்கில் குறிப்பிட்டு உள்ளது.

பேராசைக்கு இந்த வழக்கு உதாரணம்
அதைக் கருத்தில்கொண்டே இந்த வழக்கின் தீர்ப்பை நோக்கி நாம் போக வேண்டும். ஏனென்றால், அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டும் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்.

கற்பனை செய்ய முடியவில்லையே..
பொது ஊழியர் ஆவதற்கு முன்பாக குற்றவாளிகள் தரப்பில் காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெயலலிதா-சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் வருமானங்களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால், பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

வெறும் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம்
இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. அதாவது வெறும் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற வகையில் வாங்கி உள்ளனர்.

வங்கி கணக்குகள்
ஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி உள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும் செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்றவர்கள் உதவியுள்ளனர். அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை வாங்கவில்லை. அதில் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. ஆனால், நிறுவனம் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. அவற்றின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சம்பாதித்த சொத்துகளை அந்தக் கணக்கில் சேமித்து வைக்கவும் அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளவும் மட்டுமே செய்துள்ளனர். அதாவது சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான பணப்பரிமாற்றம் மட்டுமே இந்த வங்கிக் கணக்குகளில் நடந்துள்ளது.

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி
மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது. ஏன் அதிகரிக்கிறது என்றால், 'மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி' என்று நீதிமொழி அறிவுறுத்துவதை இங்கு உணர வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தவறான வழியைக் காட்டியுள்ளார்.
'உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தவறு செய்யும்போது, அதில் காட்டப்படும் சலுகை, ஒரு சமூகத்துக்குச் செய்யும் கேடாக முடியும்' என்று ஒரு தீர்ப்பில் சுட்டுக் காட்டப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

18 வருடமாக இழுத்தடித்தது யார்?
மேலும், தன் மீது கருணைகாட்ட வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகள் சொன்ன காரணங்கள் எதுவும் நியாயமான காரணங்கள் அல்ல. வழக்கு 18 ஆண்டுகள் நடந்தது என்பதில் சந்தேகம் இல்லை. நிறைய நேரத்தை வீணடித்தது குற்றவாளிகளே. அதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் பயன்தராத விஷயங்களைக் கேட்டு தாமதம் செய்தனர். இந்த வழக்குக்கு எந்தத் தொடர்பும் இல்லாத சட்ட நடைமுறைகளைச் சொல்லி தாமதம் செய்தனர். தேவையற்ற காரணங்களைச் சொல்லி சலுகைகளைப் பெற்று வழக்கை தாமதம் செய்தனர். இப்படியே அவர்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தனர். எனவே, இவர்கள் சொன்ன காரணங்கள் தண்டனையைக் குறைப்பதற்கு ஏற்ற காரணங்கள் அல்ல.

பாதி தண்டனையாவது தர வேண்டும்
மேலும், குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் அளவு, அவற்றைச் சம்பாதிக்கக் குற்றவாளிகள் பயன்படுத்திய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையை தீர்மானிக்க முடியும். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சட்டம் சொல்லும் உச்சபட்ச தண்டனையில் பாதிக்கும் மேலாக இவர்களுக்கு வழங்கினால்தான் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதாகும். ஏனென்றால் இந்த வழக்கின் தீவிரம் அப்படி. அந்தவகையில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 4 ஆண்டுகளை சிறைத் தண்டனையாக விதிக்கிறேன். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications