For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வுக்கு எதிராக திமுக ஆட்சிக் காலத்தில் சாட்சியங்கள் போலியாக உருவாக்கப்பட்டன.. வக்கீல் நாகேஸ்வரராவ்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக ஆட்சிக் காலத்தில் போலியாக சாட்சியங்கள், ஆவணங்கள் உருவாக்கப்பட்டன என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதாடினார்.

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. 11-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் முன் வைத்த வாதங்கள்:

Jayalalithaa DA case- Prosecution has failed to prove disproportionate assets

ஜெயலலிதாவுக்கும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு இடையில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும். அது போன்று எந்த விதமான பணப்பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லை. ஒரே வீட்டில் தங்கியிருந்தார்கள் என்பதற்காக அவர்கள் இடையே பணப்பரிவர்த்தனை நடைபெற்றது என்று விசாரணை அமைப்பு குற்றம் சாட்டும்போது அதனை நிரூபிக்கும் வகையில் எந்த விதமான ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கத் தவறிவிட்டனர்.

ஜெயலலிதா, மற்றவர்களை பினாமிகளாக பயன்படுத்தி சொத்து மதிப்பை உயர்த்தினார் என்று கர்நாடக அரசு கூறுவதற்கு இதுவரை எந்த விதமான ஆதாரங்களும் கிடையாது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊகங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை.

ஜெயா பப்ளிகேஷன்ஸ் தவிர ஜெயலலிதா உள்ளிட்டோர் அனைவரும் தங்கள் வருமான வரி கணக்கை வருமான வரித்துறை விதித்த கெடுவுக்கு முன்பே தாக்கல் செய்து உள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே இந்த கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத்துறையின் கையேட்டில் வருமான வரித்துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் சட்டப்படி செல்லத்தக்கவை. ஆனால் பெங்களூர் விசாரணை நீதிமன்றமோ வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்குகளை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தள்ளுபடி செய்தது. வருமான வரித்துறையின் உத்தரவில் உள்ள சொத்து மதிப்பீடுகள் இறுதியானவை. அவை சட்டத்தின் அடிப்படையில் ஏற்புடையவை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு உள்ளது.

வருமான வரித்துறையின் சொத்து மதிப்பீட்டு உத்தரவின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் உள்ளன என்று கூறுவதற்கு எவ்விதமான முகாந்திரமும் இல்லை.

1996-ல் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இந்த வழக்கு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்படும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர்கள் கடுமையாக நிர்ப்பந்திக்கப்பட்டனர். சாட்சியங்களும் ஜெயலலிதாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டன. அரசு தரப்பு சாட்சியங்களுக்கு அழுத்தம் தரப்பட்டன.

ஜெயலலிதாவின் சொத்துகளை உயர்த்தி மதிப்பீடு செய்யச்சொல்லி அதிகாரிகளுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டது. குறிப்பாக போயஸ் கார்டன் வீடு, ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் ஆகியவை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

போயஸ் கார்டன் சொத்து ஜெயலலிதாவின் தாயாரால் 1967-ல் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த பழைய வீட்டின் பராமரிப்பு, மராமத்து செலவுகளை ஏதோ சொத்து வாங்கிய செலவுகள் போல காண்பிக்கப்பட்டு இருக்கின்றன.

போயஸ் தோட்ட வீட்டுக்காக மும்பையில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து மார்பிள் கற்கள் வாங்கப்பட்டன. அந்த மார்பிள்களை வாங்குவதற்கு தரப்பட்ட கொட்டேஷன்கள் விசாரணை அமைப்பு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் சாட்சியம் அளித்தனர். அவர்கள் தங்கள் சாட்சியத்தில் தங்கள் நிறுவனம் தரப்பில் அப்படிப்பட்ட கொட்டேஷன் எதுவும் தரப்படவில்லை என்று கூறினார்கள்.

அதாவது, அந்த நிறுவனத்தின் லெட்டர் பேட் வாங்கப்பட்டு இதில் மதிப்பை உயர்த்தி போலியாக கொட்டேஷன் தயாரிக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு எதிராக உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதுபோல், ஜெயலலிதாவுக்கு எதிராக ஆவணங்களும், சாட்சியங்களும் உருவாக்கப்பட்டன. சென்னையில் இந்த வழக்கு நடைபெற்றபோது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களுக்கும், கர்நாடக நீதிமன்றங்களில் வைக்கப்பட்ட சாட்சியங்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

சொத்து மதிப்பீட்டில் நிபுணர்களின் கருத்துகள் அனைத்தையும் எந்த வித கேள்வியும் இன்றி தனிநீதிமன்றம் அப்படியே கருத்தில் எடுத்துக்கொண்டது. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றம் இந்த நிபுணர்களின் கருத்துகளை சரியான முறையில் கையாண்டது.

இவ்வாறு நாகேஸ்வர ராவ் வாதாடினார்.

இன்றும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.

English summary
The case was a politically motivated one and the prosecution has failed to prove that the Tamil Nadu Chief Minister J Jayalalithaa was holding assets disproportionate to her known source of income, L Nageshwar Rao argued at the Supreme Court today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X