ஜார்க்கண்ட் தேர்தல்: 56 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக? 3 கூட்டணி கட்சிகளுக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு?
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 55 முதல் 56 இடங்களில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளதாம். எஞ்சிய 25 முதல் 26 இடங்களை ஜேடியூ, எல்ஜேபி மற்றும் ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுப்பது என்பதும் பாஜகவின் திட்டமாம். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற பாஜகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் 55 முதல் 56 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
81 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 41 இடங்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்து வரும் சில நாட்களில் முடிவடைந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
கடந்த சில தேர்தல்களாக பாஜக தனித்தே போட்டியிட்டு வந்தது. ஆனால் தற்போது பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த ஜேடியூ, எல்ஜேபி, ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கும் கணிசமான தொகுதிகளை ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒதுக்கியாக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த 3 கட்சிகளும் மொத்தம் 30 தொகுதிகளுக்கு மேல் கேட்பதால் பாஜகவுக்கு நெருக்கடி உருவானது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று பாஜகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜ 55 முதல் 56 தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும் என்ற நிலைப்பாடும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாம். மேலும் இந்த 55- 56 வேட்பாளர்கள் யார் என்பது குறித்தும் டெல்லி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவின் இந்த முடிவின் படி அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 25 முதல் 26 இடங்கள் ஒதுக்கப்பட இருக்கிறது. அதாவது கூட்டணி கட்சிகள் அனைத்துமே டபுள் டிஜிட் இடங்களைக் கேட்டு வரும் நிலையில் சிங்கிள் டிஜிட் இடங்களைத்தான் பாஜக தர முன்வருகிறது. இதனை அந்த கூட்டணிக் கட்சிகள் ஏற்குமா? கலகக் குரல் எழுப்புமா? என்பது இனிவரும் நாட்களில் தெரியும்.












Click it and Unblock the Notifications