ராகுல் காந்தியின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் கர்நாடக தேர்தல்

Posted By: Radhakrishnan Ramasubramanian
Subscribe to Oneindia Tamil

- ஆர்.மணி

சென்னை: கர்நாடகா மாநிலத்தில் மே 12 ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது என்றே பரவலாக கருதப்படுகிறது.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்ப்பட்ட பிறகு அவர் எதிர்கொள்ளும் முதல் பெரிய தேர்தல் இது. நடைபெற போவது சட்டமன்றத் தேர்தல் தான். ஆனால் இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இன்று இந்தியாவின் 29 மாநிலங்களில் மூன்றே மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பஞ்சாப், மேகாலயா மற்றும் கர்நாடகா. ராகுல் காந்திக்கு வந்திருக்கும் தலைமை சோதனை.

rahulgandhi

ஆகவே எப்படியாவது கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டியது என்பதுதான் ராகுல் காந்தின் முன்னால் தற்பொழுது இருந்து கொண்டிருக்கும் மிகப் பெருஞ் சோதனையாகும். இந்த தேர்தல் இன்னும் சரியாக ஓராண்டில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் உறுதியாக சொல்லலாம். இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவது என்பதை விட இருக்கின்ற ஆட்சியை தக்க வைத்தும் கொள்வது என்பது எந்தவோர் கட்சிக்கும் மிகப் பெரிய சவால் மற்றும் ஆங்கிலத்தில் சொல்லுவது என்றால் 'Politicsl prestige’ ஆகும்.

தற்போது நட்சத்திர பேச்சாளராக காங்கிரஸ் பிரச்சாரத்தை கர்நாடகாவில் மேற்கொண்டிருப்பவர் மாநில முதலமைச்சர் சித்தராமையா தான். இன்னும் முழு அளவில் கர்நாடகாவில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கவில்லை. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தும் கொண்டால், நிச்சயமாக இது வெறும் 44 எம் பி க்களை மட்டுமே மக்களவையில் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக அமையும்.

காங்கிரஸ் கட்சிக்குள் தற்போதைக்கு ராகுலின் தலைமைக்கு பெரிய சவால்கள் ஏதுமில்லைதான். ஆனால் சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை தேர்தல்களில் வெற்றி பெறச் செய்யக் கூடிய அரசியல் ஆளுமை ராகுலிடம் இருக்கிறதா என்பதில் பெருத்த சந்தேகத்தை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த கருத்தைக் கொண்டிருக்கும் தலைவர்கள் பிரதமர் இந்திரா காந்தி காலத்திலிருந்து கட்சியில் இருந்து வருகின்றனர். ஏனெனில் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அது வருவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடியின் அரசியல் ஆளுமைக்கு இணையான அரசியல் ஆளுமையை ராகுலுக்கு கொடுத்து விடும். '’மோடிக்கு இணையாக நூறு சதவிகிதம் கூட வேண்டாம், மோடியின் ஆளுமையில் குறைந்த பட்சம் 70 லிருந்து 80 சதவிகிதம் வரையில் ராகுலுக்கு அரசியல் ஆளுமையை கர்நாடக வெற்றி கொடுத்து விடும். ஆனால் இது நடக்குமா என்பதுதான் எங்களது சந்தேகம்’’ என்கின்றனர் இவர்கள்.

ராகுலின் தலைமையில் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முழு அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்கு, அதாவது மோடியே ஆச்சரியப்படத் தக்க அளவுக்கு சமீபத்திய ஒரு மாநில தேர்தலில் வெற்றியை கொடுத்திருக்கிறது. உதாரணத்திற்கு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வென்றது. பாஜக விற்கு இரட்டை இலக்கத்திலேயே எம்எல்ஏக்களை தந்தது. இதே போல பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 2 மக்களவை இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் வென்றது.

காங்கிரசின் நம்பிக்கை வளரும்

காங்கிரசின் வெற்றி உளவியல் ரீதியாக கட்சிக்கு பெருத்த நன்மையை செய்யும். ஏனெனில் 2014 ல் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றி இந்தாண்டு இறுதியில் நடைபெற விருக்கும் பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு உளவியல் ரீதியாக மிகப் பெரிய நம்பிக்கைய தரும்.

கூட்டணி கணக்குகள்

மற்றோர் முக்கியமான விஷயம் கர்நாடகா வில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு ஒவ்வோர் மாநிலத்திலும் வலுவுடன் இருக்கும் கூட்டணி கட்சிகளையும், இடது சாரி கட்சிகளையும் மற்றும் ஒரு சில தேசீய கட்சிகளையும் ஒருங்கிணைத்து பெரியதோர் கூட்டணியை, அதாவது ஆங்கிலத்தில் சொன்னால், “Rainbow alliance” ஐ கட்டமைப்பது. 2004 ம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது போன்ற பெரியதோர் கூட்டணியை, மோடிக்கு எதிராக உருவாக்குவது.

கடந்த சில நாட்களாக சில மாநில கட்சிகளை அழைத்து அவர்களுடன் மோடிக்கு எதிரான பெரியதோர் கூட்டணியை அமைப்பதற்கான காரியத்தில் சோனியா காந்தி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக தன்னுடைய மகனே இருந்தாலும் பல கட்சிகளுடனும் அரசியல் பேச்சு வார்த்தைகளை சோனியா காந்தி தான் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் இதுவரையில் எந்தவோர் பெரிய மாநிலக் கட்சியும் இந்த முயற்சிக்கு போதிய ஆர்வத்தை காட்டவில்லை. இன்னும் சொல்லப் போனால் பாஜக மற்றும் காங்கிரஸூக்கு எதிராக மாநிலக் கட்சிகளை மட்டுமே வைத்து, பாஜக, காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த யோசனையை முதலில் தெரிவித்த தே மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தான். ஆனால் இந்த யோசனையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்ல சந்திரசேகர் ராவ் தான் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

உத்திரபிரதேசத்தில் சில நாட்கள் முன்பு வரையில் ஜன்ம விரோதிகளாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் வாதி கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ் வாதி கட்சியும் இணைந்து செயற் படத் துவங்கியிருக்கிறார்கள். இந்த கூட்டணி சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தலில் பாஜக வசம் இருந்த கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றி பாஜக வுக்கு சம்மட்டி அடியை கொடுத்ததிருக்கிறது.

ஆனால் எல்லா மாநில கட்சிகளும் ராகுலை தலைவராக ஏற்றுக் கொள்ளுவார்களா என்ற சந்தேகம் வலுவடைந்து கொண்டிருக்கிறது. ராகுலின் தலைமையை ஏற்க பல மாநில கட்சிகளும் தயக்கம் காட்டி வருகின்றன. உதாரணத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி. இவருடையை பிரச்சனை ராகுல் காந்தி மட்டுமல்ல, இடது சாரிகளையும் இந்த கூட்டணியில் சேர்க்க சோனியா காந்தி எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள். '’இது உண்மைதான். சில இடதுசாரி தலைவர்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரிக்கும், சோனியா காந்திக்கும் இருக்கும் அரசியல் ரீதியிலான நட்பு. சோனியா காந்தி எப்படியாவது இடதுசாரிக் கட்சிகளை கூட்டிணிக்குள் கொண்டு வந்து விடுவார் என்று மமதா பானர்ஜி நம்புகிறார். ஆகவே அவ்வளவு சுலபத்தில், மோடிக்கு எதிராக ஒரு பெருங்கூட்டணியை, 2004 ல் ஏற்படுத்தப் பட்டது போன்ற ஒரு கூட்டணியை ஏற்படுத்துவது இந்த முறை அவ்வளவு சாத்தியமில்லை’’ என்கிறார் கொல்கத்தாவில் பணியாற்றும் மூத்த பத்திரிகையாளர் ராஜீவ் மல்ஹோத்ரா.

இந்த பின்புலத்தில் பார்த்தால் தான் கர்நாடகாவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் ராகுல் காந்தி யின் தலைவிதியை எந்தளவுக்கு நிர்ணயிக்கப் போகின்றது என்பது அனைவருக்கும் புரியும்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
How Karnataka elections are going to be a tough one for Rahul Gandhi - வரவிருக்கும் கர்நாடக தேர்தல்கள் ராகுல் காந்தியின் அரசியல் தலைமைக்கு ஏன் கடினமானவையாக இருக்கப் போகின்றன

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற