கின்னார் நிலச்சரிவு சோகம்: சடசடவென சரிந்த மலை... புதையுண்டு பலியான உயிர்கள் - தேடும் பணி தீவிரம்
ஹிமாச்சலபிரதேசத்தில் கின்னாரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் வாகனங்கள் மண்ணோடு மண்ணாக புதையுண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலரது உடல்களை தேடும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலம் கின்னார் மாவட்டத்தில் உள்ள ரெகாங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மண்ணோடு மண்ணாக புதையுண்டவர்களின் உடல்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் கின்னார் மாவட்டம் தேவதைகளின் வசிப்பிடம் என்றழைக்கப்படும் சிறப்புடையது. பனி படர்ந்த மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், செழுமையான பண்ணைகள் மற்றும் அழகிய திராட்சைத் தோட்டங்கள் இந்த இடத்தின் ரம்மியமான தோற்றத்தினை விளக்கும் வகையில் இருக்கும். இங்குள்ள சங்லா பள்ளத்தாக்கு மற்றும் ஹங்க்ராங் பள்ளத்தாக்கு ஆகிய இரண்டும் கின்னாரில் அமைந்துள்ள முக்கியமான பள்ளத்தாக்குகளாகும். சங்லா பள்ளத்தாக்கு அதன் பழத் தோட்டங்களுக்காகவும், ஹங்க்ராங் பள்ளத்தாக்கு அதன் மேய்ச்சல் நிலங்களுக்காகவும் சுற்றுலா துறையினரால் விரும்பப்படுகிறது.

அழகு அதிகம் நிறைந்த இந்த மாவட்டத்தில்தான் இந்த ஆண்டு அதிக அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு பலரது உயிரை பலிவாங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த சில வாரங்களாகவே அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு பலரது உயிரை காவு வாங்கி வருகிறது. எந்த நேரத்தில் எங்கு நிலச்சரிவு ஏற்படுமோ என மக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளது.
கின்னார் மாவட்டத்தின் சங்லா பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 26ஆம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக சங்லா பள்ளத்தாக்கில் உள்ள பட்சேரி பாலம் இடிந்து விழுந்தது. அங்கு சுற்றுலா சென்ற பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த சோகம் மறைவதற்குள் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பத்வாஸ்க்கு அருகே மலையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. அதிபயங்கர சப்தத்தோடு மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அந்த நிலச்சரிவில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் கின்னார் மாவட்டத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையானது திடீரென மொத்தமாக சரிந்து விழுந்தது. இதில் அந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஹிமாச்சல் சாலை போக்குவரத்துக் கழகம் பேருந்து உட்படப் பல வாகனங்கள் மண்ணோடு மண்ணாக புதையுண்டன.
அங்கே விரைந்த இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையும் மீட்புப்பணிகளுக்காக வரவழைக்கப்பட்டது. விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றன. 50க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி புதைந்த நிலையில் இதுவரை 13 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மண்ணில் புதைந்தவர்களின் உடலை இரவு பகலாக தேடும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications